ஊரடங்கு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடுகள் போன்றவற்றால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதோடு, சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடு மற்றும் கோயில்களுக்கு தடை போன்றவற்றால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வியாரிகள் வருகை இல்லை. இதனால் வருகின்ற பூக்களும் தேக்கமடைகின்றன. வெளியூர் செல்வதிலும் சிக்கல்கள் இருப்பதால் கிடைத்த விலைக்கு பூக்களை விற்பதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கினறனர். அதன்படி, ஒரு கிலோ சம்மங்கி ரூ.5 க்கும், கோழிக்கொண்டை ரூ.10, மல்லிகை ரூ. 80 முதல் 150, கனகாம்பரம் ரூ 160, முல்லை ரூ. 140, செண்டு மல்லி ரூ.15, ரோஸ், அரலி ரூ.20 என விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இது சித்திரை மாதம், திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பு வரை மல்லிகை ரூ.2000 க்கும் மேல் விற்பனையான நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். விலை ஒருபுறம் குறைந்திருந்தாலும் அவற்றை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் மார்க்கெட் பகுதிக்கு வராததால் வரத்து பூக்கள் அனைத்தும் தேங்கி வீணாகி வருகின்றனர்.
விலை குறைவிற்கு இதுவும் ஒரு காரணம் என்றாலும், விலை குறைந்தும் அவற்றை விற்க முடியாத சூழலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உள்ளூர் விற்பனை மட்டுமின்றி வெளியூர் ஏற்றுமதி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலை சரிந்தும் பூக்களை வாங்கி சூட முடியாத சூழலில் பொதுமக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.