கடந்த 24 மணி நேரங்களில் க்ரிப்டோ கரன்சிகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய விற்பனைகளின் காரணமாக க்ரிப்டோ சந்தைகளில் இருந்து சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து திடீரென மாயமாகியுள்ளது.
TerraUSD stablecoin என்ற க்ரிப்டோ கரன்சி வீழ்ந்ததன் தொடர்ச்சியாக பிற க்ரிப்டோ கரன்சிகளும் விற்கப்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஈத்திரியம் என்ற க்ரிப்டோ கரன்சியின் மதிப்பு சுமார் 16 சதவிகிதம் குறைந்த போது வரலாறு காணாத வீழ்ச்சியில் சென்ற பிட்காயின் தற்போது நேற்று ஒரே நாளில் சுமார் 10 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் இந்த க்ரிப்டோ கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி தொடர்ந்து ஆசிய கண்டத்தில் உள்ள க்ரிப்டோ சொத்துகளிலும் எதிரொலித்துள்ளது. ஹாங் காங் நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான பிசி டெக்னாலஜி குழுமத்தின் பங்குகள் 6.7 சதவிகிதம் என்ற அளவிலும், ட்ரேட்ஸ்டேஷன், காயின்செக் ஆகிய பிரபல நிறுவனங்களின் உரிமையாளரும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெரு நிறுவனமுமான மோனெக்ஸ் குழுமத்தின் பங்குகள் 10 சதவிகிதம் என்ற அளவிலும் குறைந்துள்ளன.
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்துமே பொருளாதார வீக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து வரும் சூழலில் க்ரிப்டோ கரன்சிகளை விற்பனை செய்வது சவாலாகியுள்ளது. S&P 500 ஃப்யூச்சர்ஸ் நிறுவனம் சுமார் 0.8 சதவிகிதம் இழப்பு காரணமாக MSCI Asia Pacific Index பட்டியலில் இருந்து தன் இடத்தைத் தவற விட்டுள்ளது.
சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் க்ரிப்டோ கரன்சி தளங்களில் முதலீடு செய்பவர்களையும் பாதிப்படையச் செய்யும் என்பதற்கு உதாரணங்களாக இவை நடந்துள்ளன. தற்போது பிட்காயின் சுமார் 4.2 சதவிகிதமும், ஈத்திரியம் சுமார் 9 சதவிகிதமும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமான அதன் விலையான சுமார் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை விட சற்றே குறைந்துள்ள பிட்காயின் மதிப்பு தற்போது சுமார் 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் நிற்கிறது. இந்தியச் சந்தைகளில் பிட்காயின் ஒன்றின் விலை தற்போது 23.8 லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது. கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் ஈத்திரியம் சர்வதேச சந்தைகளில் சுமார் 1937.85 அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலும், இந்தியாவில் 1.65 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 11 அன்று, சுமார் 85 சதவிகித வீழ்ச்சியின் காரணமாக, கடும் இழப்பில் இருக்கும் டெர்ரா லூனா க்ரிப்டோ கரன்சி.
சர்வதேச அளவில் சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தொட்ட டெர்ரா லூனா, தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவான மதிப்பைக் கொண்டுள்ளது. இழப்பில் இருந்து மீள்வதற்காக சந்தையைத் தொடர்ந்து கவலையோடு கண்காணித்து வருகின்றனர் முதலீட்டாளர்கள்.