இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எரியும் இந்திய கிச்சன் பட்ஜெட் வெகுவாகக் குறையும்.


சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையொட்டி, இந்தியாவிலும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.8, சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.15, சோயா எண்ணெய் விலை ரூ.5 குறைந்துள்ளது.


விலை குறைக்கும் முன்னணி பிராண்டுகள்:


இது இந்த வாரத்தில் மேலும் குறைந்து லிட்டருக்கு ரூ.20 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெமினி எடிபிள்ஸ் அண்ட் ஃபேட்ஸ் நிறுவனத்தின் ஃப்ரீடம் மற்றும் ஜெமினி பிராண்ட் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளது. இந்த பிராண்டின் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 குறைந்துள்ளது. 
மதர்ஸ் டெய்ரி நிறுவனம் அதன் தாரா எண்ணெய்யின் விலையை லிட்டருக்கு ரூ.15 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரு லிட்டர் தாரா சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.235க்கு விற்பனையாகிறட்து. கடுகு எண்ணெய் லிட்டருக்கு ரூ.210க்கு விற்பனை செய்துள்ளது.


அதானி வில்மார் நிறுவனமும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஃபார்சூன் பிராண்ட் எண்ணெய்கள் அடுத்த வாரம் முதல் குறைக்கப்பட்ட எம்ஆர்பி அடங்கிய பேக்கிங்கில் வரும் என எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஃபார்ச்சூன் பிராண்ட் சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.245க்கு விற்பனையாகிறது.


விலை ஏற்றம் பின்னணி:


கடந்த பிப்ரவரியில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மூண்டது. இந்த போர் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 2022ல் சூரியகாந்தி எண்ணெய் விலை 29% வரை அதிகரித்தது. பாமாயில் விலை 17 சதவீதம், கடுகு எண்ணெய் 7 சதவீதம், கடலை எண்ணெய் 4 சதவீதம் விலை ஏற்றம் கண்டிருந்தன.


இந்தியா, அதன் பாமாயில் தேவையில் 45% இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர்ததையடுத்து இந்தோனேசியாவும் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், சமையல் எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது.


இது இந்தியக் குடும்பங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி. சமையல் எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், பணவீக்கம் என இந்தியக் குடும்பங்கள் சிக்கித் தவிக்கும் சூழலில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மகிழ்ச்சியான செய்தியாக வரவேற்கப்படுகிறது. இதனால் குடும்ப பட்ஜெட்டில் பெருந்தொகை மிச்சமாகும் என நடுத்தர வர்க்கத்தினர் தெரிவித்துள்ளனர்.