சிமெண்ட், செங்கல், கம்பி இவைகள் தான் ஒரு கட்டிடத்தின் உயிர் ஆதாரம், ஆனால் இவற்றின் வரலாறு காணாத விலை உயர்வால் கட்டுமான தொழில் மூச்சை விட சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. ஊரடங்கிற்கு முன், ஊரடங்கிற்கு பின் என இரண்டாக பிரித்தோமானால் கட்டுமான பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.


கட்டுமான பொருட்களின் விலை நிலவரம்  



  • ஒரு மூட்டை சிமெண்ட் (மகா சக்தி போன்ற அடிப்படை பிராண்டுகள்) 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு சிமெண்ட் மூட்டை விலை 420 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • ஒரு மூட்டை சிமெண்ட் (கோரமண்டல், அல்ட்ரா டெக் போன்ற பிராண்டுகள்) 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு சிமெண்ட் மூட்டை விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • ஒரு டன் கட்டுமான கம்பி (ஏஆர்எஸ், துர்கா போன்ற அடிப்படை பிராண்டுகள்) 55000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு டன் கம்பியின் விலை 65000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • ஒரு டன் கட்டுமான கம்பி (டாடா போன்ற பிராண்டுகள்) 65000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு டன் கம்பியின் விலை 75000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • ஒரு லோட் செங்கல் (3000 கல்) 22000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு லோட் செங்கல் விலை 26000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • ஒரு யூனிட் எம் சாண்ட் 5500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு யூனிட் எம் சாண்ட் விலை 6500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

  • ஜல்லியின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை, ஏறக்குறைய அதே விலையில் தொடர்கிறது.


விற்பனையாளர்கள் சொல்வது என்ன ?


விலை ஏற்றதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளனர் கட்டுமான பொருள் விற்பனையாளர்கள். நம்மிடம் பேசிய விற்பனையாளர் சரவணன் " ஊரடங்கு நேரத்தில் அரசு கட்டுமான தொழில் நடைபெறலாம் என்று சொல்லிவிட்டு, கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை, பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை, அதனால் குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே இயங்கின, ஆனால் டிமாண்ட் அதிகமாக இருந்தது. இந்த சூழலை பயன்படுத்தி கட்டுமான பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்" என்கின்றார். 


கட்டுமான நிறுவனங்களின் நிலை என்ன ?


இது ஒரு செயற்கையான விலை உயர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டுமான நிறுவனங்கள் சங்க தலைவர் சாந்தகுமார் இடம் பேசினோம், அவர் "ஒழுங்கு முறை ஆணையம் அமைத்தால் மட்டுமே இந்த பொய்யான விலை ஏற்றங்களை தவிர்க்க முடியும். சென்னையில் கட்டுமான தொழில்கள் அனைத்தும் பெரும்பாலும் முடங்கியுள்ளன, ஏற்கனவே ஒரு சதுர அடிக்கு இவ்ளோ தொகை என பேசிவிட்டு தற்போது பல இடங்களில் பேசிய தொகையில் வீட்டை முடித்து கொடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. டெண்டர்கள் எடுத்தவர்கள் நிலையும் மோசமாக உள்ளது, லாபம் குறைந்தாலும் பரவாயில்லை, ஆனால் நஷ்டம் ஏற்படும் என்றால் யார் தொழில் செய்வார்கள்" என்கிறார்.


இந்நிலையில் அகில இந்திய அளவில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர், அரசும் இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் பணி துவங்கும் போது, வீட்டிற்கு ஒரு பட்ஜெட் போட்டு பணியை துவங்கிய வீட்டு உரிமையாளர்கள், தற்போது உயர்ந்து நிற்கும் கட்டுமானப் பொருட்களின் விலையால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.