LPG Cylinder Price Hike: 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை 48.50 ரூபாயும், 5 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை 12 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு:
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (Oil Marketing Agencies) எரிவாயு சிலிண்டர்களின் விலையில் உயர்வை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வானது, வணிக ரீதியான LPG சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது வணிகங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்வால், அது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இது உணவு பொருட்களின் விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும்.
தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களை பெருமளவில் பாதிக்க கூடும் என கருதப்படுகிறது.
விற்பனை விலையில் மாற்றம்:
19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.48.50 உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.12 அதிகரித்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை.
செப்டம்பர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஏறக்குறைய 39 ரூபாய் உயர்ந்ததைத் தொடர்ந்து, இது இரண்டாவது தொடர்ச்சியான உயர்வாகும். 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 1,652.50 ரூபாயில் இருந்து 1,691.50 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விமான எரிபொருள்:
இதற்கிடையில், டெல்லியில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) விலை 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஆயிரம் லிட்டரானது ரூ.93,480ல் இருந்து ரூ.87,597 ஆக குறைந்துள்ளது. ஏப்ரல் 2024க்குப் பிறகு இதுவே குறைந்த ஏடிஎஃப் விலையாகும், இது விமான நிறுவனங்களுக்குச் சற்று சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் , விமான பயண டிக்கெட் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது, இருப்பினும் அந்த நிறுவனங்கள் மனது வைத்து குறைக்க வேண்டும்.