சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்றும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 64,000 ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.
நிற்காமல் தொடர்ந்து உயர்ந்துவரும் தங்கத்தின் விலை
2025-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜனவரி 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,150 ரூபாயாக இருந்தது. அது முதல் வார இறுதியில் 7,215 ரூபாயாக அதிகரித்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்த தங்கத்தின் விலை, ஜனவரி மாத இறுதியில், ஒரு கிராம் 7,730 ரூபாயாகவும், சவரன் 62 ஆயிரம் ரூபாயையும் நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து, 62,000 ரூபாயை கடந்தது. இந்த நிலையில், 10 நாட்களில் சுமார் 1,500 ரூபாய் வரை விலை உயர்வை கண்டுள்ளது.
ரூ.64,000-ஐ நெருங்கிய தங்கத்தின் விலை
இன்று(10.02.25) தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 35 ரூபாய் உயர்ந்து, கிராம் 7,980 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து, சவரன் 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி, தொடர்ந்து விலை உயர்ந்தால், தங்கத்தின் வலை எங்கு போய் நிற்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி
வெள்ளியின் விலையும் அவ்வப்போது உயர்ந்தாலும், மக்களுக்கு ஒரே ஆறுதலாக, பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து வெள்ளியின் விலை ஒரே அளவில்தான் உள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.