ஆகஸ்ட் 5-ம் தேதி முன் தேதியிட்ட வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக இருந்த இந்த விஷயத்தில் பல ஆண்டுக்கு பிறகு இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இந்த முடிவால் என்ன மாற்றம் நிகழும் என பார்ப்பதற்கு முன்பு எதற்காக இந்த வரி முறை அமல்படுத்தப்பட்டது என்பதை பார்த்துவிடுவோம்.
வோடபோன் சிக்கல்
2007-ம் ஆண்டு வோடபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை 1,120 கோடி டாலருக்கு வாங்கியது. ஹட்ச் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும் இரு நிறுவனங்களின் தாய் நிறுவனம் வெளிநாட்டில் இருந்ததால் இந்தியாவுக்கு வெளியே இந்த பங்கு பரிமாற்றம் நடந்தது.
இந்த நிலையில் 2009-ம் ஆண்டு வருமான வரித்துறை வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த பங்குகள் பரிமாற்றத்துக்கு TDS பிடிக்கவில்லை என நோட்டீஸ் அனுப்பியது. சுமார் 11,000 கோடி அளவுக்கு வரி செலுத்த வேண்டும் என அபராதம் விதித்தது. வரியை செலுத்தாததால் ரூ.7,900 கோடி அபராதம் (2011) விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வோடபோன் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறைக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. இரண்டு வெளிநாடுகளில் நடக்கும் பரிவர்த்தனையில் இந்திய அரசு வரியை பெற முடியாது என தீர்ப்பு வழங்கியது. அரசாங்கம் சீராய்வு மனுவை தாக்கல் செய்தாலும், அதுவும் வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாகவே இருந்தது.
இந்த நிலையில் வருமான வரிசட்டத்தை முன் தேதியிட்டு அப்போதைய மத்திய அரசு திருத்தம் (மார்ச் 2012) செய்தது. புதிய மாற்றத்தின் படி மீண்டும் வோடபோன் வரி (ரூ.11218 கோடி) செலுத்த வேண்டும் என 2013-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனை அடுத்து சர்வதேச அளவில் வழக்கு தொடுத்தது வோடபோன்.
கெய்ர்ன் சிக்கல்
கெய்ர்ன் இங்கிலாந்து தாய் நிறுவனம். அதன் இந்திய பிரிவு கெய்ர்ன் இந்தியா. இந்த நிலையில் கெய்ர்ன் இங்கிலாந்தில் இருந்து கெய்ர்ன் இந்தியா பரிமாற்றம் செய்தது. இது ஒரு குழுமத்துக்குள் நடக்கும் நடவடிக்கை. இந்த 2006-07ம் நிதி ஆண்டில் நடந்தது. இந்த பரிமாற்றத்துக்கும் வரி செலுத்தமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கெய்ர்ன் வழக்கு தொடுத்தது. ஆனால் கெய்ர்ன் இந்தியாவுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. ஆனால் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது. இந்த நிலையில் 2011-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன் இந்தியாவில் 58.5 சதவீத பங்குகளை வாங்கியது. இதில் பத்து சதவீத பங்குகளை வருமான வரித்துறை நிறுத்தி வைத்தது. மேலும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய டிவிடெண்ட் தொகையையும் நிறுத்திவைத்தது.
இந்த நிலையில் மார்ச் 2012-ம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தில் முன் தேதியிட்டு மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் மத்திய அரசு வரி செலுத்துமாறு கேட்டது. இரு நிறுவனங்களும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின.
இரு வழக்குகளிலும் தோல்வி
வோடபோன் மற்றும் கெய்ர்ன் ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடின. இதில் இரு வழக்குகளில் இந்தியா தோல்வி அடைந்தது. வோடபோனுக்கு வரிப்பது இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தத்தை மீறுவதாகும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதேபோல கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வந்திருக்கிறது. 120 கோடி டாலர்கள் நிறுவனத்துக்கு இழப்பீடாக தரவேண்டும் என்றும் 50 கோடி டாலர் அளவுக்கு வட்டி மற்றும் சட்ட போராட்டத்துக்கான செலவுக்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸ் நீதிமன்றம் இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
தற்போதைய சட்ட திருத்தம்
இந்த நிலையில் முன் தேதியிட்ட வரிவிதிப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 2012 மார்ச் 28-க்கும் முன்பாக இருந்த அனைத்து கோரிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கெய்ர்ன் மற்றும் வோடபோன் ஆகியவை முக்கிய நிறுவனங்களாக இருந்தாலும் மொத்தம் 17 வழக்குகள் இதுசம்பந்தமாக நிலுவையில் உள்ளன.
இதுவரை நான்கு நிறுவனங்களிடம் இருந்து ரூ.8,089 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.7,900 கோடி ரூபாய் கெய்ர்ன் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்பட்டிருக்கிறது. வோடபோன் நிறுவனத்திடம் இருந்து 45 கோடி ரூபாயும், டபிள்யூஎன்எஸ் (WNS) நிறுவனத்திடம் இருந்து ரூ.48 கோடியும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொகையை வட்டியில்லாமல் திருப்பி அளிக்கப்படும் என்றும் இது தொடர்பான அனைத்து வரி கோரிக்கைகள் நீக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால் முன் தேதியிட்ட வரி தொடர்பான அத்தனை வழக்குகளையும் மற்றும் சட்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் திரும்பபெற வேண்டும். மேலும் வழக்கு தொடர்ந்தவர்கள் இழப்பீடு, வழக்குக்கான கட்டணம், வட்டி உள்ளிட்ட எதனையும் கேட்ககூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
முடிவுக்கு வந்த சிக்கல்
2014-ம் ஆண்டு பா.ஜ.கவின் முக்கிய கோரிக்கைகளில் இந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறியதுதான். ஆனால் ஏழு ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தியது தற்போதைய மத்திய அரசு.
இரு வழக்குகளிலும் தோல்வியடைந்ததால்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததா என நிதிசெயலாளர் டிவி சோமநாதனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்திய சட்டத்தின் படிதான் இந்த வழக்குகள் முடியவேண்டும். சர்வதேச நடுவர் மன்ற தீர்ப்பு அடிப்படையில் இவை முடியக்கூடாது என தெரிவித்திருக்கிறார். மேலும் 2015-ம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி முன் தேதியிட்ட வரி கூடாது என்பதுதான் அரசின் நிலைபாடு என்பதை ( முன் தேதியிட்ட வரி கொண்டுவந்த போது அதனை வரித் தீவிரவாதம் என்று அருண் ஜேட்லி விமர்சனம் செய்திருந்தார்) தெரிவித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாகதான் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இத்தனை ஆண்டுகால நிலையற்றத்தன்மை முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் பல ஆண்டுகளை இழந்திருக்க வேண்டாம் என்றே வரித்துறையை சார்ந்த பல வல்லுநர்களும் தெரிவித்திருக்கின்றனர்.