தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திமுக அரசின் முதல் முமுமையான நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். பெரும்பாலும், மத்திய பாஜக அரசின் திட்டங்களின் தமிழ் மொழி பெயர்ப்பாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இணைய வழியில் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய, மத்திய அரசு, GEM Portal  என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. அதுபோலவே, தமிழக பட்ஜெட்டிலும் E – Procurement திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய பாஜக அரசு, SFURTI (Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற பாரம்பரிய தொழில்களின் மறுசீரமைப்புக்கான நிதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுபோல, உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்காக, குறு நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும், மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. இதற்காக, திருமண உதவித் திட்டத்தையும், தாலிக்கு தங்கம் திட்டத்தையும் நிறுத்தக் கூடாது. மத்திய பாஜக அரசைப் பின்பற்றி, இந்த உதவித் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது வரவேற்கத்தக்கது. அனைத்து பண உதவிகளையும், நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பெரியார் சிந்தனைகள் தொகுப்பை 21 மொழிகளில் வெளியிட ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. மற்ற தலைவர்களின் சிந்தனைகளையும் வெளியிட நிதி ஒதுக்க வேண்டும். பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்ற பக்தி இலங்கியங்கள், அனைத்து மக்களுக்கும் கிடைக்க நிதி ஒதுக்க வேண்டும். தமிழக மக்களின் பண்பாடு, வரலாறு, தொன்மையின் அடையாளமாக கோயில்கள் உள்ளன என்பதை தமிழக பட்ஜெட்டில் ஒப்புக் கொண்டதற்கு நன்றி. தமிழக கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.


சுயமரியாதை, சமூக நீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளரச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் கொண்ட திராவிட மாடல் வளர்ச்சி என்று பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றால், அரசியல் அதிகாரம் அனைவருக்கும் பரவலாக்கப்பட வேண்டும். பட்டியலின வகுப்பினருக்கு நிதி, உள்துறை, வருவாய் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களாக நியமிக்கப்படப் போவது எப்போது? மாநிலங்களின் தான் ஒன்றியம் தான் இந்தியா என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மாநிலங்கள் இணைந்து உருவாக்கியது அல்ல இந்தியா. நிர்வாக வசதிக்காகவே, இந்திய நாடு, பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்டு வருகிறது. எனவே, பிரிவினை உள்நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.


தமிழக அரசின் கடன் ரூ. 6 லட்சத்து 53 ஆயிரத்து 348 கோடியே 73 லட்சம் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த கடனை குறைப்பதற்கான திட்டங்கள் இல்லாத நிலையில், 2022-23-ல் 90 ஆயிரத்து 116 கோடியே 52 லட்சம் கடன் பெற திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இது தான் திராவிட மாடல் வளர்ச்சியா?தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த தொழில் நகரமான கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சட்ட மன்றத்தில் நான் கோரிக்கை விடுத்திருந்தேன். கோவை மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000, நகைக் கடன் தள்ளுபடி போன்ற திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது” என அவர் தெரிவித்தார்