நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடுவில் இடைவெளியுடன் நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறும்.
தொடர்ந்து, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது, வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வரி திட்டங்களை தாக்கல் செய்வார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடைசி முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. உலக பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த பட்ஜெட் அமைய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
சாமானியர்களின் கோரிக்கை:
எப்போதும் போலவே, நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் ஏதேனும் விலக்கு அளிக்கப்படுமா என சாமானியர்கள் எதிர்நோக்கியுள்ளனர். வருமான வரி அடுக்குகளின் திருத்தம், வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது, வீட்டுவசதி திட்டங்களில் ஊக்குவிப்பு ஆகியவையும் சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது, நிதி பற்றாக்குறை இலக்கை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகிய விவகாரங்களில் மத்திய பாஜக சவால்களை சந்தித்து வருகிறது.
இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் மக்கள் நல திட்டங்களுடன் கிராமப்புறம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக யுபிஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிளேயர்ஸ்பாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் யாதவ், "மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கேமிங் துறையில் அதன் தாக்கத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
சரக்கு மற்றும் சேவை வரி, வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குவது, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து திறமையான இளைஞர்களை ஈர்ப்பதன் மூலம் வணிகம் செய்வதற்கு சாதகமான சூழலை இந்த பட்ஜெட் உருவாக்க முடியும்" என்றார்.
உள்கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம்:
இதுகுறித்து செஞ்சுவரி மேட்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உத்தம் மலானி கூறுகையில், "உச்சக்கட்ட நிச்சயமற்ற தன்மையில் உலக பொருளாதாரம் உள்ள நிலையில், பெரிய வளர்ச்சி அடைந்த நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே, ஏற்றுமதியை அதிகப்படுத்துவதன் மூலம் சிறிது காலத்திற்கு பொருளாதார மந்த நிலை ஏற்படலாம். எனவே, பொருளாதார வளர்ச்சி உள்ளூர் நுகர்வை சார்ந்து இருக்கலாம். எனவே, வரிக் கொள்கைகள் மேலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதன் மூலம் மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருக்கும்" என்றார்.