இந்திய நாட்டின் 2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித் துறை சார்ந்து மக்கள், கல்வியாளர்களிடம் உள்ள எதிர்பார்ப்புகள் குறித்துக் காணலாம்.


நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31ஆம் தேதி) கூடியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். 


இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இத்ற்கிடையே, நாளை (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இந்த நிலையில் இந்திய நாட்டின் கல்வித் துறை சார்ந்து பட்ஜெட்டில் கீழே குறிப்பிட்டவை சார்ந்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




கல்வித் துறையில் பொதுத்துறை முதலீட்டின் அதிகரிப்பு


கல்வி சார்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள், மத்திய அரசு தன்னுடைய ஜிடிபியில் குறைந்தபட்சம் 6 சதவீதத் தொகையைக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அப்போதுதான் கல்வி சார் சாதனைகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் அவை தெரிவிக்கின்றன. மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய கல்விக் கொள்கைகூட 6 சதவீத ஜிடிபியை வலியுறுத்துகிறது. 


எனினும் இதுவரை எந்த ஒரு பட்ஜெட்டும் அதில் பாதி அளவு ஜிடிபியைக் கூட கல்வித் துறைக்கு ஒதுக்கியதில்லை. இந்த நிலையில், கல்வித் துறைக்கு பொதுத்துறையின் முதலீட்டைஅதிகரிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் மூலமே இளம் இந்தியர்களுக்கான வளர்ச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெண் கல்வியை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் 


இந்தியாவில் கல்வி கற்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், பாலின பேதமும் அதுசார்ந்த மாணவர் சேர்க்கையும் முக்கிய சவாலாக இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கிறது. அனைத்து சிறுமிகளுக்கும் இளம் பெண்களுக்கும் தரமான கல்வி என்பது சம்பந்தப்பட்டவர்களின் உரிமையாகும். இதை அரசு உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம் ஆகும். 


கல்வி சார் சேவைகளுக்கு குறைந்த ஜிஎஸ்டி


வரிகளே அரசுக்கு வருவாயை ஈட்டித் தருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. வரி வருவாயே, மக்களுக்கு மானியங்கள் வழங்கவும் உதவிகரமாக உள்ளது. எனினும் கல்வி சார்ந்த சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பது, மாணவர் சேர்க்கையை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால், கல்வித் துறை சார்ந்த சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக வரி விதிப்பைக் குறைக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




ஆசிரியர் பயிற்சிக்குப் போதிய நிதி


2021- 21ஆம் நிதி ஆண்டில் ஆசிரியர் பயிற்சிக்கு 250 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் போதிய நிதி அளிக்கப்படவில்லை. இந்த நிதி 127 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது. சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கு  2022-23 ஆம் நிதி ஆண்டில் 6 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. எனினும் இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவு ஆகும். அதனால் இந்த முறை ஆசிரியர் பயிற்சிக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 


சர்வதேச தரத்தில் உயர் கல்வி


இந்தியாவை உலகளாவிய கல்வி முனையமாக்க தேசிய கல்விக் கொள்கை பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் மற்றும் கலப்பு டிகிரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தி உள்ளது. அதேபோல மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, சர்வதேச தரத்தில் உயர் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் கல்விக் கொள்கை தெரிவித்துள்ளது.


டிஜிட்டல்மயமாக்கம்


அரசு கல்வித்துறை சார்ந்து டிஜிட்டல் மயமாக்கல் குறித்து அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''இந்திய மாணவர்களின் வீட்டிலேயே உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும் வகையில், டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஐஎஸ்டிஇ தரத்தின் அடிப்படையில் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கும். இதற்கான உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும். தலைசிறந்த பல்கலைக்கழகங்களும் அரசு கல்வி நிறுவனங்களும் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்''  என்று அறிவித்திருந்தார்.




இந்த நிலையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் டிஜிட்டல்மயமாக்கல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆக்மெண்டட் ரியாலிட்டி, மெய்நிகர் ஆய்வகங்கள், ரோபாட்டிக்ஸ் படிப்புகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும். டிஜிட்டல் கல்வி துறைக்கு சிறப்பு வரிச் சலுகை வழங்க வேண்டும். ஆன்லைன் கல்வி முறையை மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மாணவர்களின் மன நலத்துக்கு நிதி ஒதுக்கீடு


கொரோனா பெருந்தொற்று, அதைத் தொடர்ந்த பொது முடக்கம் மற்றும் ஆன்லைன் கல்வி முறை ஆகியவை குழந்தைகள் மற்றும் பெரியோரின் மன நலத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாணவர்களின் மன நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.