தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்திய ரூபாயின் குறியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் நடந்த நிலையில், நாளை சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறை. இதோடு தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்திய ரூபாயின் குறியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது.
விளம்பரத்தின் கீழ் எல்லோர்க்கும் எல்லாம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…” எனத் தெரிவித்துள்ளார்.
இலட்சியினை மாற்றப்பட்டது பெரும் விவாதப்பொருளாக உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் “தேவநாகரி எழுத்தை அடிப்படையாகக் கொண்டதால் ₹ சின்னம் கைவிடப்பட்டதாக TN மாநில திட்டக் குழுவின் நிர்வாக துணைத் தலைவர் கூறுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை இதுபோன்ற முட்டாள்களால் சூழ்ந்துள்ளார். தந்தை ஆதரித்ததை மகன் நிராகரித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், “திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நமது ரூபாயில் இணைக்கப்பட்ட ரூபாயின் சின்னத்தினை மாற்றியுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேட்டியளித்த ₹ சின்னம் வடிவமைத்த வடிவமைப்பாளர் உதயக்குமார் கூறுகையில், “இதுகுறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. தமிழக அரசின் மாற்றத்திற்கு ஏதேனும் காரணம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.