தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில், தமிழ்நாட்டில், 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை காணலாம்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் வீடுகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருவதாக கூறிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அதைத் தொடர்ந்து 2025-26-ம் ஆண்டில், 1 லட்சம் வீடுகளின் கட்டுமானம், ரூ.3,500 கோடியில் தொடங்கப்படும் என அறிவித்தார்.
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.2,100 கோடி ஒதுக்கீடு
தமழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமம் வரை சென்றடையும் வகையில் தரமான சாலைகள் அமைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26-ம் ஆண்டில், 6,100 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடியில் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் பராமரிப்புக்கென, ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்ததன்படி, 2025-26-ம் ஆண்டிற்கு ரூ.120 கோடி விடுவிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
ரூ.600 கோடியில் விளிம்புநிலை மக்களுக்கு 25,000 புதிய வீடுகள்
தமிழ்நாட்டில், கடந்த 2001-ம் ஆண்டிற்கு முன், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், ஊரக பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காக கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகளை கட்டித்தர அரசு முடிவு செய்து, 2025-26-ம் ஆண்டில், இதற்கென ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டு, 25,000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் அடிப்படை வசதிகள்
தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை அமைத்துத்தரும் நோக்கோடு தொடங்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகையை விடுவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி வரை இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கான ஊதியத் தொகை ரூ.2839 கோடி உள்ளிட்ட இந்த திட்டத்திற்கான மொத்த நிதியான மொத்தம் ரூ.3796 கோடியை மத்திய அரசு தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறினார். அதனை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார்.
ஆக மொத்தத்தில், இந்த பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.