தமிழ்நாடு பட்ஜெட் 2022-ஐ நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கிய உடன் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சில நேரம் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் நிதியமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்க தொடங்கினார். அதன்பின்னர் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “உள்ளாட்சித் தேர்தல் மிகவும் நியாமான முறையில் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் நடந்த கொண்ட விதம் மிகவும் தவறான ஒன்றாக அமைந்திருந்தது. அந்த நபர் மனித உரிமைகளையும் மீறியிருந்தார். இன்று சட்டப்பேரவையில் கூட அவர் மீது பொய் வழக்கு தொடர்கிறார்கள் என்று அதிமுகவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
ஆனால் நாங்கள் யார் மீது பொய்யான வழக்கு தொடரவில்லை. எங்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதாவது ஊழல் மற்றும் தவறு செய்த அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி தான் அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வீடுகளில் சட்டப்படி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி என்பது ஒன்று இருப்பது பல மக்களுக்கு இந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடந்த ரெய்டு மூலம் நடந்த ரெய்டு மூலம் தான் தெரியவந்துள்ளது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.
அதேபோல் நீட் தேர்வில் அதிமுக செய்ததை தான் திமுக செய்தது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அன்று அதிமுக நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டத்தையே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சியில் நாங்கள் சொன்னதைப் போல் நீட் விவகாரத்தில் நல்ல முடிவை பெற்று தருவோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எங்களுடைய முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நம்முடைய மாநிலத்தின் நிதிப்பற்றாகுறையை குறைத்திருக்கிறோம். ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலும் சிறப்பான நிதி நிர்வாகம் நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்