தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.


ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.


அதன்பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு இந்த சபை எப்படி நடக்கும் என்று நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தும் இது போன்று அமல்களில் ஈடுபடுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார். 






அதிமுக வெளிநடப்பு செய்ததால் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கி பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது பேட்டியளித்த அவர், "தமிழக அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட் வெத்துவேட்டாகும். வருவாய் பற்றாக்குறை மதிப்பீடு ரூ. 56 ஆயிரம் கோடி ஏற்பட்டு இருக்கிறது. 2021 - 22 ம் ஆண்டுக்கான கடன் கடந்த ஆண்டு 1,08,175 கோடி ரூபாய் வாங்கி இன்று செலவு செய்து இருக்கிறார்கள். 2022 - 23 ம் ஆண்டுக்கான வருகின்ற ஆண்டு சுமார் 1,20,000 கோடி கடன் வாங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். கடந்த 2011 ம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் இருந்து விலகும்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றார். அப்பொழுது தமிழ்நாட்டின் கடன் 1,00,000 கோடியே கடனாக இருந்தது. 


அதேபோல், 2021 ம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சியைவிட்டு செல்லும்போது சுமார் 4,00,000 கோடி கடனாக இருந்தது. அவை அனைத்தையும் மூலதன செலவுகளுக்காக செலவளித்தோம். ஆனால், 2021 திமுக ஆட்சிக்கு பிறகு சுமார் 1,08,000 கோடி கடன் பெற்று இருக்கிறார்கள். இருப்பினும், இதில் எந்தவொரு முக்கியமான திட்டங்களும் இல்லை, அது நிறைவேற்றப்பட்டதாகவும் தெரியவில்லை. 


நடப்பு 22- 23 ம் ஆண்டு சுமார் 1,20,000 கோடி கடன் வாங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு சுமார் 2,28,000 கோடி ரூபாய் கடன் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நாங்கள் 10 ஆண்டுகளாக 4,00,000 கோடியே செலவாக பெற்றோம். அதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் வருவாய் எங்களுக்கு குறைவாகவே இருந்தது. அப்பொழுதும் நாங்கள் கடன் குறைவாகவே பெற்றோம். 


திமுக ஆட்சிக்குபிறகு கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் அனைத்து இயங்கின. வருவாய் அதிகரித்தபோது கடன் குறைந்துதான் இருக்கவேண்டுமே தவிர, அதிகரிக்க கூடாது. இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான். திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரேன் என்று அறிவித்தார்கள் அதுவும் பட்ஜெட் தாக்கத்தில் சாக்கு போக்கு சொல்லி தள்ளி வைத்தார்கள். 


அதேபோல், திமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்று தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண