தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.


ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார். பின்னர், அ.தி.மு.க.வினரை அமருமாறு பேரவைத் தலைவர் அப்பாவு அறிவுறுத்தினார். ஆனாலும், அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், அ.தி.மு.க.வினர் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.




பின்னர், மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “ பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்தும், தேவைகளை நிறைவு செய்தும், மக்கள் நல அரசின் இலக்கணமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடுதான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையையும், முதலமைச்சரின் தனிப்பிரிவையும் இணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் இதுவரை 10 லட்சத்து ஆயிரத்து 883 மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.


மதிப்புக்கூட்டு வரி நடைமுறையில் இருந்த போது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி இழப்பீட்டை வழங்கும் கால வரையறை 30.6.2022ம் நாளன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும்.




கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஆறாவது மாநில நிதிக்குழுவின்  காலவரை இந்த அரசால் ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அண்மையில் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்மீது, அரசு தனது நடவடிக்கை எடுத்த அறிக்கையை விரைவில் இம்மாமன்றத்தில் தாக்கல் செய்யும்." இவ்வாறு அவர் பேசினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண