தமிழ்நாடு பட்ஜெட் 2022-ஐ நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கிய உடன் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சில நேரம் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் நிதியமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட் உரையில் வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, “வானிலைய துல்லியமாக கணிக்க சூப்பர் கணினிகள், 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு சுமார் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது” என நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் நிதியமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு ரேடார். இந்த புதிய ரேடார் ஏற்கெனவே இருக்கும் ரேடார்களுடன் இணைந்து வானிலையை கணிக்க நல்ல உதவியாக அமையும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 2 ரேடார்களில் ஒன்று கடலோர பகுதிகளுக்கும் மற்றொன்று தர்மபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளின் வானிலை கணிக்க அமைக்கப்படும் என்று கருதுகிறேன். இதன்மூலம் சாதாரண மனிதர்கள் கூட வானிலையை எளிதாக இனிமேல் கணிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்