TN Agri Budget 2025 Loan Waive: பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இதுவரை 10 ஆயிரத்து 346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பயிர்க்கடன் தள்ளுபடி


பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், “2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு மொத்த பயிர்க்கடன் தள்ளுபடியான 12 ஆயிரத்து 110 கோடியே 74 லட்சம் ரூபாயில் தற்போது வரை 10 ஆயிரத்து 346 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்கான வட்டியாக ஆயிரத்து 816 கோடியே 90 லட்ச ரூபாயும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் அடுத்த நிதியாண்டில்  விவசாய பயிர்க்கடனாக ஆயிரத்து 477 கோடி தள்ளுபடி செய்யவும் நிதி விடுவிக்கப்படும் என, வேளாண் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இதுவரை 10 ஆயிரத்து 346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு  என மொத்தமாக 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


வட்டி மானியத்திற்கு ரூ.853 கோடி


2021-22-ஆம் நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண்டில் 11.03.2025 வரை 67 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு 54,800 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடனும், 12 லட்சத்து 24,000 நபர்களுக்கு 6,588 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடை பராமரிப்புக் கடனும் வழங்கப்பட்டுள்ளன. 2021-22-ஆம் நிதியாண்டு முதல் வட்டி மானியம் மற்றும் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான வட்டி ஊக்கத்தொகை 2,162 கோடியே 84 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் வட்டி மானியத்திற்கென 853 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


6 நெல் சேமிப்பு வளாகங்கள்:


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இரண்டு இலட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்புடன் கூடிய 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது