TN Agri Budget 2025: தமிழ்நாட்டில் ஆயிரம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்:


சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம், “ பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பெற்று, உழவர்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் 2025-26 வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 4000 வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். அவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திடும் வகையில், தமிழ்நாட்டில் ஆயிரம்  முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.


முதலமைச்சரின் உழவர் நல சேவை மையத்தின் பலன்கள்


முதலமைச்சரின் மருந்தகம் போலவே, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.  இந்த மையங்களில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுன்ம். அதோடு, நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் உற்பத்தி விளைபொருட்களை மதிப்பு கூட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். 


மானிய உதவி


ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்களை அமைத்திட 30 சதவிகிதம் மானியம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 42 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.


மலிவு விலையில் பொருட்கள்:


முதல்வர் மருந்தகம் திட்டத்தில் பி. ஃபார்ம் அல்லது டி. ஃபார்ம் படித்தவர்களோ, அவர்களது ஒப்புதலைப் பெற்ற தொழில்முனைவோரோ, கூட்டுறவு அமைப்புகளோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதேபாணியி வேளாண் பட்டதாரிகள் அல்லது வேளாண் பட்டயதாரர்கள், புதிய முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் சூழலில், மீதமுள்ள 7 முதல் 14 லட்சம் வரையிலான தொகைக்கு, உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.  முதல்வர் மருந்தகங்களில் காப்புரிமை இல்லாத மருந்துகள் 25 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. அதேபாணியில் விவசாயத்திற்கான பொருட்களும் மலிவு விலையில், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்களில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.