மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல்:
இந்த வருடத்தில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசு அமையும் வரையிலான கால வரையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தலைமையிலான பாஜக கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது முழு பட்ஜெட்டாகும்.
முதலமைச்சர் ஸ்டாலின்:
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் , மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்றும், இதன் காரணமாக வரும் ஜூலை 27ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இதுவரை தமிழ்நாடு சந்தித்த 2 பேரிடர்களுக்கான போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு , எந்தவொரு சிறப்பு திட்டமும் இல்லை. தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த எந்தவொரு திட்டம் குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. மத்திய பட்ஜெட்டை கண்டித்து டெல்லியில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்:
ஒரு நாட்டின் நிதி நிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.
அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார்.