Tamil Nadu Budget 2024-25: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். 


தமிழ்நாடு அரசின் பட்ஜெட்:


தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள், வரும் 22ம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். அத்துடன், நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.


தேர்தல் - முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்:


நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதிகள், இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற அரசியல்  கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகபட்ச மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுகவுக்கு இது முக்கியமான பட்ஜெட்டாக கருதப்படுகிறது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக கூட்டணி, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38ல் வெற்றி பெற்றது. எனவே, இந்த முறையும் அந்த மகத்தான வெற்றியை வசமாக்கும் நோக்கில், பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் விதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:


தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 7 பிரிவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,




  • இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மேம்படுத்திவிடும் வகையிலும்,  சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.

  • தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையிலும்,  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம்

  • பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  இளைஞர்களை மேம்படுத்தி விடுவதற்காக அனைத்து விதமான உதவிகள் செய்து தரப்படும்.

  • ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு முதலீடுகளை குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 






நிதிநிலை அறிக்கை - இலட்சினை வெளியீடு: 


முன்னதாக, 2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைக்காக ‘தடைகளைத் தாண்டி’ என்ற தலைப்பில் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முழங்கிடும் முத்திரை சின்னம் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு அரசு இலச்சினை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.