தமிழ்நாடு அரசின் 2022-2023 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கயிறு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நமது மாநில விவசாயிகள் - தொழில் முனைவோர்களின் வருமானத்தை பெருக்கி, Geo textiles & தென்னை நார் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்த, மாநிலம் முழுக்க கயிறு தொழில் குழுமங்களை மேம்படுத்த, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை கோவையில் அமைக்க முதற்கட்டமாக ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். முதல்வருக்கு கோவை மாவட்ட மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள். நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில் பட்ஜெட்டில் கோவை மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ”இன்று தமிழக அரசு அறிவித்த பட்ஜெட்டில் திருமண உதவி திட்டத்தை மாணவிகள் கல்வி உதவித் திட்டம் ஆக மாற்றியது, பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கியது, கோவையில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியதாகும்.


 



ஈஸ்வரன்


ஆனால் சிங்காரச் சென்னைக்கு 500 கோடி நிதி ஒதுக்கி விட்டு கோவைக்கு எதுவும் ஒதுக்கவில்லை. சென்னையில் இருப்பதைப்போல கோவையில் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடவில்லை. கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கோவை அண்ணா பல்கலைக் கழகத்தை தனி பல்கலைக் கழகமாக அறிவிக்கவில்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. கோவையில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க மாநில அரசின் நிதி உதவி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.  பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் வெள்ளலூர் குப்பை கிடங்கை முழுமையாக சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கோவையை தமிழகத்தின் மென்பொருள் உற்பத்தி மையமாக மாற்றிட சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பிற்காக தனி திட்டம் எதுவும் அறிவிக்கவில்லை ஆகியவை கண்டிக்கத்தக்கதாகும். கோவை மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது என்பது இந்த பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது. வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் கோவையின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்களை உடனடியாக அறிவிக்குமாறு தமிழக அரசை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.