தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் பேரவையை சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். இதன்பின்னர் மார்ச் 20 ஆம் தேதியான இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து பலதுறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களும், நடப்பாண்டில் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் குறித்தும், அதற்கான செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் பெரிதும் எதிர்பார்த்த “ரூ.1000 உரிமைத்தொகை” வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு நாளை (மார்ச் 21) வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மார்ச் 22 ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் அதன்பிறகு மார்ச் 23, 24, 27,28 ஆகிய தேதிகளில் இந்த 2 நிதிநிலை அறிக்கை மீது பொதுவிவாதம் நடத்தப்பட்டு அதற்கு அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள்.
மார்ச் 29 ஆம் தேதி மானிய கோரிக்கைகள் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும். 15 நாட்கள் தொடர்ந்து காலையிலும், 7 நாட்கள் மாலையிலும் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.