தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையில் 2021-ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தது முதலே,  தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.


பனைப் பொருட்கள் வளர்ச்சி பனை மேம்பாட்டு இயக்கம்:


2024 25 ஆம் ஆண்டில் பனை சாகுபடியினை ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும். மேலும் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 200 பனைத் தொழிலாளர்களுக்கு தரமான பனைவெல்லம் பனங்கற்கண்டு பிற மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பெற்ற அனைவரும் உரிய கருவிகளும் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


எரிசக்தித் துறை:


பாசன வேளாண்மையினால் ஏற்படும் ஆதாயங்களை உணர்ந்து நிலத்தடி நீரினை பயன்படுத்தி விவசாயிகள் அதிக உற்பத்தி செய்து உலகுக்கு அளித்து தாமும் உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு வேளாண் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 23 லட்சத்து 51 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகளுக்கு மும்மூனை மின்சாரம் வழங்கப்பட்டு, விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையான கட்டண தொகையாக சுமார் 7280 கோடி ரூபாய் நிதி இணை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசு வழங்கும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:


2024 25 ஆம் ஆண்டில் பண்ணை குட்டைகள் நீர் செறிவூட்டுத் தண்டுகள், கசிவு நீர் குட்டை செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள் மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இரண்டு லட்சம் பணிகள் 7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு:


மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்.


அப்பீடா (APEDA) பயிற்சி பெற்ற விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக்குதல்: 


பல்வேறு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், வெள்ளரி ஆகியவற்றைப் பயிரிடும், அப்பீடா பயிற்சி பெற்ற நூறு விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களை நூற்றுக்கு நூறு ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான உரிய சான்றிதழ்களைப் பெற்றுத் தரும் பொருட்டு, ஒரு நபருக்கு 15,000 ரூபாய் வீதம் 15 இலட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


2024 25 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளுக்கான கால்நடை பராமரிப்பு மீன்வளத்துறை பால்வளத்துறை நீர்வள ஆதாரத்துறை ஊரக வளர்ச்சித்துறை உணவுத்துறை கூட்டுறவுத்துறை வருவாய்த்துறை வனத்துறை பட்டு வளர்ச்சி துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 42 ஆயிரத்து 281 கோடியே 87 லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.