TN Budget 2024 Highlights in Tamil: 2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று  சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிடத்தகுந்த 15 அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம். 


* கலைஞரின் கனவு இல்லம் திட்டம்


குடிசை இல்லா தமிழ்நாடு என்னும் கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.  


சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில்‌ ஏறத்தாழ 8 இலட்சம்‌ குடிசைவீடுகளில்‌ மக்கள்‌ வாழ்ந்து வருவதாகக்‌ கண்டறியப்பட்டுள்ளது. 'குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும்‌ வகையில்‌, வரும்‌ 2030 ஆம்‌ ஆண்டிற்குள்‌ தமிழ்நாட்டின்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ எட்டு இலட்சம்‌ கான்கிர்ட்‌ வீடுகள்‌ கட்டித்‌ தரப்படும்‌. முதற்கட்டமாக, 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ புதிய வீடுகள்‌ ஒவ்வொன்றும்‌ 3.50 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ உருவாக்கப்படும்‌. தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில்‌ சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன்‌, வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம்‌ வங்கிக்‌கணக்குகளில்‌ நேரடியாகச்‌ செலுத்தப்படும்‌. இப்புதிய திட்டம்‌ கலைஞரின்‌ கனவு இல்லம்‌ என்ற பெயரில்‌ வரும்‌ நிதியாண்டில்‌ 3,500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌.


* முதலமைச்சரின்‌ தாயுமானவர்‌ திட்டம்


ஆதரவற்றோர்‌, தனித்து வாழும்‌ முதியோர்‌, ஒற்றைப்‌ பெற்றோர்‌ சூடும்பங்கள்‌, பெற்றோரை இழந்த குழந்தைகள்‌, மனநலம்‌ குன்றியவர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌, சிறப்புக்‌ குறைபாடு உடைய குழந்தைகள்‌ உள்ள குடும்பங்கள்‌ போன்ற சமூகத்தின்‌ விளிம்புநிலையில்‌ வாழ்ந்திடும்‌ மக்கள்‌ அனைவரும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ அடையாளம்‌ காணப்பட்டு, அவர்களுக்குத்‌ தேவையான அடிப்படை வசதிகள்‌ மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன்‌ மேம்பாடு, வீடுகள்‌ போன்ற அனைத்து உதவிகளும்‌ வழங்கப்படும்‌. ’முதலமைச்சரின்‌ தாயுமானவர்‌ திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.


மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும். மத்திய குடிமைப் பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின்‌ எண்ணிக்கையை அதிகரிக்க இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


* தமிழ் புதல்வன் திட்டம்- இனி மாணவர்களுக்கும் மாதாமாதம் ரூ.1000


பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ் புதல்வன் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும்.


* 1 லட்சம் மாணவர்களுக்கு வங்கிக் கடன்


2024- 25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி அளவிலான கல்விக் கடனை பல்வேறு வங்கிகள் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 


* உயர் கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கத் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம், அரசு உதவிபெறும் பள்ளி  மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.


* வட சென்னைக்கு ரூ.1000 கோடி நிதி


வட சென்னைக்கு ரூ.1000 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய குடியிருப்புகள் கட்டித் தருவது, பள்ளிகளை திறன் மிகுந்தவையாக மேம்படுத்துவது, தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பது, ஏரிகள் சீரமைப்பு மற்றும் மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


* சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள பொது இடங்களில் வை- ஃபை வசதி அறிமுகம் செய்யப்படும்.


* 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ பணிகள் விரிவாக்கம் செய்யப்படும்.  


* மூன்றாம் பாலினத்தவரின் கல்வி, விடுதிக் கட்டண செலவுகளை அரசே ஏற்கும்.


* தொல்குடி பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.


* 15 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


* தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் எனவும் இதற்கென ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுடன் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும். 


இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.