Tamil Nadu Budget 2024 Highlights: சமூக நீதியை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Tamil Nadu Budget 2024 Highlights: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ABP இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமூக நீதியை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் இது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருகிறார்கள். ரூ. 8 லட்சம் கோடிக்கு அதிகமான கடனை தமிழக அரசு வைத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
பட்ஜெட் அறிவிப்புகளை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அனைத்துத்துறை அமைச்சர்கள், ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய பேரிடர் நிதியிலிருந்து இதுவரை எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. கடன் வாங்கும் வரம்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது என தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் ரூ.5, 718 கோடி மதிப்பிலான 6, 071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதர் பெயரில் குடியிறுப்புகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும், குறளகம் நவீனப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டங்கள், பன்னாட்டு கண்காட்சிகள் நடத்த கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலக தரம் வாய்ந்த ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ அமைக்கப்படும். சிங்கார சென்னையின் புதிய அடையாளமாக இது திகழும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் கட்ட ரூ.227 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
மத்திய அரசின் கைவினைகர்கள் திட்டம் தமிழ்நாடு அரசின் சமூக நீதி கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது. அதனால், மேம்படுத்தப்பட்ட புதிய கைவினைகர்கள் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசின் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் தளத்தில் #BestCMBestBudget என்ற இந்திய அளவில் அதிக அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கவனத்தில்கொண்டு விலங்குகள் இனப்பெருக்க தடை திட்டத்தை முறையாக செயல்படுத்த உத்தரவு – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
கோவையில் ரூ. 1, 100 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் வழிதடத்தை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பூவிருந்தவல்லி - கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் புதிய வழித்தடம் 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் தேவைப்படும் சூழலில், இந்த ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள், 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி, மதுரையில் ரூ.345கோடி செலவில் 6.4 லட்சம் சதுர அடியிலும், திருச்சியில் ரூ.350 கோடி செலவில் 6.3 லட்சம் சதுர அடியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
1,000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி.
ஆறு மாத உறைவிடப் பயிற்சிக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் கடற்கரைகளை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
நிதி ஆயோக் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வெறும் 2.2% பேர் மட்டுமே உள்ளனர் என இன்றைய தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
உயர்கல்வியை தொடங்க விரும்பும் மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அரசு உதவி பெறும் ஊரக பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் ரூ. 300 கோடியில் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
புதுமை பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னைக்கு அருகே பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் 500 கோடி ரூபாய் மதிப்பீடில் உருவாக்கப்படவுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதன்படி, சென்னையில் புதிய ஆவடி, செம்ம்பியம், ரெட்டில்ஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சாலைகள் 300 கோடி ரூபாயில் அகலப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க ‘தாயுமானவர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2 ஆயிரம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2,000 கி.மீ சாலைப் பணிகள் ரூ. 1,000 கோடியில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் வீடு இல்லாதவர்களுக்கு அரசின் உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் ரூ. 3, 500 கொடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேலும்,
ரூ. 65 லட்சத்தில் அழகன்குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ரூ.1000 கோடி செலவில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும். குடிசையற்ற தமிழகம் காண 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டு இலக்கிய படைப்புகளை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டத்தின் படி அடுத்த 3 ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒத்துக்கீடு செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெயரிக்க 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு பேரவையில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் தமிழர்களை தலைநிமிர செய்தன - அமைச்சர் தங்கம் தென்னரசு
160 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது. அன்றுமுதல் இன்று வரை வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசி வருகிறார்.
2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு அரசின் கடன் சுமை..
மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஏற்கெனவே உள்ள கடனை அடைப்பதற்காகவும், புதிய திட்டங்கள் அறிவிப்பதற்காகவும் கடன் வாங்கும். அந்த வகையில், 2023-2024 நிதியாண்டில், 1 லட்சத்து 43 ஆயிரத்து 198 கோடி ரூபாய் கடன் பெற தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், தமிழ்நாடு அரசின் கடன் 7 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, 51 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு அரசு திருப்பி செலுத்தும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநிலத்தின் வருவாய்
2023-24 ஆம் ஆண்டுக்கான வருவாய் வரவினங்கள் 2,70,515 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டை விட (திருத்த மதிப்பீடுகள்)10.1 சதவீதம் அதிகமாகும். அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் வரவு, செலவு விவரங்கள்:
மொத்த செலவினங்கள் - ரூ. 3,65,321 கோடி
மொத்த வரவினங்கள் - ரூ.2,73,246 கோடி
வருவாய் பற்றாக்குறை - ரூ. 37,540 கோடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணப்பட்டுள்ளார்.
2023-2024 நிதியாண்டில், 1 லட்சத்து 43 ஆயிரத்து 198 கோடி ரூபாய் கடன் பெற தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், தமிழ்நாடு அரசின் கடன் 7 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, 51 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு அரசு திருப்பி செலுத்தும் என்றும் கடந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு வெளியான நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலத்திற்கான பெரும்பான்மையான வருவாயானது அதாவது 73.3 சதவிகிதம் வணிக வரிகள் மூலம் கிடைக்கிறது. முத்திரை தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு மூலம் 14.1 சதவிகித வருவாய் ஈட்டப்படுகிறது. மாநில ஆயத்தீர்வை மூலம் 6.5 சதவிகித வருவாயையும், வாகனங்களின் மிதான வரிகள் மூலம் 4.9 சதவிகிதமும் மற்றும் ஏனைய வரிகள் மூலம் 1.2 சதவிகித வருவாயையும் தமிழ்நாடு அரசு ஈட்டி வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதிகள், இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் வெளியாகும் தமிழ்நாடு பட்ஜெட்டில், வாக்காளர்களை கவரும் விதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.
சமூக நீதி , கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளின் கீழ் இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைக்காக ‘தடைகளைத் தாண்டி’ என்ற தலைப்பில் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முழங்கிடும் முத்திரை சின்னம் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு அரசு இலச்சினை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காலை 10 மணியளவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
Background
Tamil Nadu Budget 2024-25 Highlights:
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்:
தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள், வரும் 22ம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். அத்துடன், நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.
தேர்தல் - முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்:
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதிகள், இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகபட்ச மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுகவுக்கு இது முக்கியமான பட்ஜெட்டாக கருதப்படுகிறது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக கூட்டணி, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38ல் வெற்றி பெற்றது. எனவே, இந்த முறையும் அந்த மகத்தான வெற்றியை வசமாக்கும் நோக்கில், பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் விதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:
தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 7 பிரிவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,
- இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மேம்படுத்திவிடும் வகையிலும், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.
- தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம்
- பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்களை மேம்படுத்தி விடுவதற்காக அனைத்து விதமான உதவிகள் செய்து தரப்படும்.
- ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு முதலீடுகளை குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலை அறிக்கை - இலட்சினை வெளியீடு:
முன்னதாக, 2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைக்காக ‘தடைகளைத் தாண்டி’ என்ற தலைப்பில் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முழங்கிடும் முத்திரை சின்னம் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு அரசு இலச்சினை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -