Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, விளையாட்டுத் துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சர்வதேச தரத்திலான வீரர்களை தமிழகத்தில் இருந்து உருவாக்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட 6 பகுதிகளில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு பயிற்சி மையங்கள்:
பட்ஜெட் அறிக்கையின்படி, விளையாட்டுப் போட்டிகளின் தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்றிடவும் இலட்சிய வேட்கையுடன் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கிட, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இப்பயிற்சி மையங்கள் இறகுப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமிக்க பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் மெருகேற்றி, தரணி போற்றிடும் சாதனையாளர்களாக உருவாக்கிட முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும். இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, பாட்டு, இசை, நடனம் என பன்முகப் போட்டிகள் நடத்தப்படும். மேலும், கிரிக்கெட், கையுந்து பந்து, கால்பந்து, இறகுப்பந்து, சிலம்பம் என 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்படும்.
பாரா தடகள மையங்கள்:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமிழ்நாடு அரசின் தாரக மந்திரம். இம்முயற்சிகளின் ஓர் பகுதியாக மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் (Para Athletes) திறமைகளை மேம்படுத்திட, நாட்டிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான 6 விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறனை வளர்க்கும் நோக்கோடு அவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற சிறப்பு இறகுப்பந்து, கையுந்து பந்து, வாள்வீச்சு உள்ளிட்ட அமைக்கப்பட்டு வருகின்றன.
கடல்சார் நீர் விளையாட்டு:
கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்த்திடவும் நீர் விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்திடவும் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதமி (Tamil Nadu Olympic Water Sports Academy) இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசையில் அமைக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.