தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் பொதுபட்ஜெட் மீதான விவாதம் 21, 22, 23ஆம் தேதிகள் சட்டப்பேரவையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி விவாதத்தின் மீதான ஸ்டாலின் பதிலுரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 21,22,23ஆம் தேதிகளில் உறுப்பினர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் 24ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21,22மற்றும் 23ஆகிய மூன்று தேதிகளில் கேள்வி நேரம் இடம்பெறும் என்று சபாநாயகர் கூறியுள்ளார். அத்துடன் கடந்த கூட்டத் தொடரை போல் இம்முறையும் கேள்வி நேரம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அத்துடன் நிதியமைச்சரின் பதில் மற்றும் வேளாண் துறை அமைச்சரின் பதில் ஆகியவை நேரடியாக ஒளிப்பரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாணிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக அடுத்த சில நாட்களில் விவரங்கள் வெளியாகும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இது தொடர்பாக அரசுடன் பரிசீலனை செய்து தேதி அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்