இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டின் குடியரசுத் தலைவராக பட்டியலினப் பெண் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமைக்குரிய விஷயம் என கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ”எதிர் கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம். நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும். மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் தாக்கல் செய்யவுள்ளதை உலகமே உற்று நோக்குகிறது” என அவர் கூறியுள்ளார்.
அதேபோல், ”நாட்டிற்கும் நாட்டின் குடிமக்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே மத்திய அரசின் நோக்கம். அவை சுமூகமாக நடைபெற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் இன்று மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடாளுமன்றத்திற்கு 10.58க்கு வருகை தந்தார். அவருடன் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப்தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். நாட்டின் குடியரசுத் தலைவராக பங்கேற்றுள்ள திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை ஆகும். அதாவது, நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர் பேசுவது இதுவே முதல் முறையாகும்.
ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் இரு அவை உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் நிர்மலா சீதாராமன் முழுமையாக தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
பட்ஜெட் தாக்கல்:
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை பட்ஜெட்டுடன் தொடங்கும் கூட்டத்தொடர் வரும் 13-ந் தேதி வரை நடக்கிறது. பின்னர், மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.
எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால், நடப்பு கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. முன்னதாக, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.