மோடி தலைமையிலான அரசு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், தனது 7ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.


தங்களின் வாக்குறுதிகளை காப்பி அடித்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், "2024 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் படிக்க நிதியமைச்சருக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று நான் ஏற்கனவே ட்வீட் செய்துள்ளேன்.


சிதம்பரம் சொன்னது என்ன? வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம், தொழில் பயிற்சியுடன் கூடிய உதவித் தொகை மற்றும் ஏஞ்சல் வரியை ஒழித்தல் போன்ற எங்கள் திட்டங்களின் அடிப்படையிலான யோசனைகளை அவர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டார்.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலிருந்து இன்னும் பல யோசனைகளை அவர் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை.


கடுமையான வேலையின்மை நிலவி வரும் நிலையில், அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் 290 லட்சம் பேர் பயனடைவார்கள் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்டது.


 






பணவீக்கம் மற்றுமொரு பெரிய சவாலாகும். மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம் 3.4 சதவிகிதமாக உள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 5.1 சதவிகிதமாக உள்ளது. உணவுப் பணவீக்கம் 9.4 சதவிகிதமாக உள்ளது.


பணவீக்கம் பிரச்சினையை ஒரு சில சிறிய வாக்கியங்களில் பொருளாதார கணக்கெடுப்பு நிராகரித்திருக்கிறது. நிதியமைச்சர், தனது பேச்சின் பாரா 3 இல் பத்து வார்த்தைகளில் அதை நிராகரித்திருக்கிறார். அரசாங்கத்தின் இந்த போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். பணவீக்கப் பிரச்சினையை அரசாங்கம் தீவிரமாகக் கையாளும் என்ற நம்பிக்கையை பட்ஜெட் உரையில் எதுவும் நமக்குத் தரவில்லை" என்றார்.