மொபைல் ஃபோன்கள், மொபைல் PCBA (A printed circuit board assembly (PCBA)) ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய பட்ஜெட் 2024-25:


2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவரது உரையின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகதவும் அவர் குறிப்பிட்டார். 


மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு,  4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு,புதிய வரி விதிப்பு முறையில் வரி சதவிகிதம் மாற்றம்,ஏஞ்சல் வரி ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றிருந்தன. 


சுங்க வரி (Customs duty Tax) குறைப்பு:


புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துப் பொருட்களுக்கு சுங்க வரி முற்றிலும் விலக்கு அறிக்கப்பட்டுள்ளது. செல்போன், சார்ஜர், செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக  குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமல் தெரிவிக்கையில்,” ஸ்மாட்ஃபோன், மொபைல் போன்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல்போன்களின் ஏற்றுமதி 100 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் மொபைல் உற்பத்தி துறை வளர்ந்துள்ளது. அதனால் சுங்க வரி (BCD (Basic Customs Duty)) 15 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.


இதன்மூலம் நாடு முழுவதும் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.


தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.