நாடாளுமன்ற மழை கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாளை மத்திய பட்ஜெட் – 7வது முறையாக தாக்கல் செய்யும் முதல் பெண்
தொடர்ந்து 7 முறையாக நாளை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கவிருக்கிறார் நிர்மலா சீதாராமன், இதன்மூலம், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா முறியடிக்கவுள்ளார்.
ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசு இருக்க்ம்போது மொரார்ஜி தேசாய் 10 முறை தாக்கல் செய்துள்ளார். அடுத்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார், பிராணப் முகர்ஜி 8 முறையும், மன்மோகன் சிங் 5 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்னென்ன ?
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் 2023 – 24ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- அதில், நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய பொருளாதாரம் 6.5 % முதல் 7 % வளர்ச்சி காணும் என்றும் பணவீக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் சமர்பித்துள்ள ஆய்வறிக்கை மூலம் தகவல் கிடைத்துள்ளது.
- புதிய தொழில் தொடங்க நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தொழில் முனைவோர் ஏராளமானோர் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதே நேரத்தில் மோசமான கால நிலையால் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலின் போது பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
இந்நிலையில், நாளை காலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது, நீட் மோசடி விவகாரம், உத்தரபிரதேசத்தில் சிவனை வழிபாடும் கன்வர் யாத்திரை நாட்களில் சாலையோர கடைகளில் உரிமையாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இசுலாமிய சமூகத்திற்கு எதிரானது என்ற முழக்கத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதோடு, பயங்கரவாதம், வேலைவாய்ப்பு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளையும் எழுப்பி பட்ஜெட் கூட்டத் தொடரை முடக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி
அதோடு, மக்களவை துணைத் தலைவர் பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் கோரியிருக்கும் நிலையில், இது தொடர்பான பிரச்னையையும் நாளை பட்ஜெட் தாக்கலின்போது கொண்டுவந்து முழக்கமிடவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில், பாஜக கூட்டணியில் உள்ள, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும் தன் பங்கிற்கு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு வலியுறுத்தியுள்ளது. கூடுதலாக, தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் ஆளும் பாஜக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.