நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏராளமான புதிய அறிவிப்புகளும், வரி தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பட்ஜெட் தொகை முழு விவரம்:


இந்த நிலையில், நாடு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வரவு-செலவு தொகை( கோடிகளில்) முழு விவரத்தை கீழே காணலாம்.


1952-1953ம் ஆண்டு நாட்டின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் ரூபாய் 401 கோடி நிதி வரவு-செலவாக தாக்கல் செய்யப்பட்டது. 1956-57ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் முதன்முறையாக ரூபாய் 500 கோடியை தாண்டியது. அந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூபாய் 545 கோடி தொகை ஒதுக்கப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தொகை உயர்ந்துகொண்டே சென்ற நிலையில், 1961-62ம் ஆண்டு நாட்டின் பட்ஜெட் முதன்முறையாக ரூபாய் 1000 கோடியை கடந்தது. அந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூபாய் 1024 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளிலே நாட்டின் நிதிநிலை அறிக்கையில் 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1964-65ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூபாய் 2 ஆயிரத்து 95 கோடி நிதி வரவு-செலவாக காட்டப்பட்டது.


முதன்முறையாக ரூ.25 ஆயிரம் கோடி பட்ஜெட்:


1968-69ம் நிதியாண்டில் ரூபாய் 3 ஆயிரத்து 35 கோடியும், 1971-72ம் நிதியாண்டில் ரூபாய் 4 ஆயிரத்து 107 கோடியும் தொகை ஒதுக்கப்பட்ட நிலையில் நாட்டின் பட்ஜெட் முதன்முறையாக 5 ஆயிரம் கோடியை 1974ம் ஆண்டு கடந்தது. 1974-75ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்காக மொத்தம் ரூபாய் 5 ஆயிரத்து 408 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தொகை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், 1978-79ம் ஆண்டு முதன்முறையாக நாட்டின் பட்ஜெட் 10 ஆயிரம் கோடியை கடந்தது. அந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூபாய் 10 ஆயிரத்து 899 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல திட்டங்களை மத்தியில் இருந்த அரசுகள் செயல்படுத்தி வந்த நிலையில், 1983-84ம் ஆண்டு நாட்டின் நிதிநிலை அறிக்கை 25 ஆயிரம் கோடியை கடந்தது. அந்தாண்டு நாட்டின் பட்ஜெட்டில் ரூபாய் 25 ஆயிரத்து 495 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


90-களில் 1 லட்சம் கோடி பட்ஜெட்:


பட்ஜெட்டில் 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்த 3 ஆண்டுகளிலே நாட்டின் பட்ஜெட் ரூபாய் 50 ஆயிரம் கோடியை கடந்தது. 1986 -87ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூபாய் 52 ஆயிரத்து 862 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு நிதித்திட்டங்களை மத்தியில் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு நிதியாண்டில் செயல்படுத்தி வந்தன.


90களுக்கு பிறகு உலகம் தொழில்நுட்ப வளர்ச்சி, இணைய வளர்ச்சி என்று புதிய பரிமாணத்திற்கு சென்ற பிறகு இந்தியாவும் அதற்கேற்ப செல்ல வேணடிய அவசியம் ஏற்பட்டது. இந்த சூழலில், 1990-1991ம் ஆண்டு நாட்டின் பட்ஜெட் முதன்முறையாக ரூபாய் 1 லட்சம் கோடியை கடந்தது. அந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரத்து 844 கோடி மொத்தம் ஒதுக்கீடானது.


ரூ.50 லட்சம் கோடியை கடக்குமா?


காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2009-2010ம் ஆண்டு மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 838 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் 17 லட்சத்து 94 ஆயிரத்து 892 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஒவ்வொரு நிதியாண்டிலும் நாட்டின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 2024-2025 நிதியாண்டில் மொத்தம் ரூபாய் 47 லட்சத்து 65 ஆயிரத்து 768 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வரவு – செலவு கணக்கு ரூபாய் 50 லட்சம் கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தொகையும், அந்தந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வரவு-செலவு கணக்கிற்கான தொகை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மோடி அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் தொகையை விட இரண்டாவதாக தாக்கல் செய்த பட்ஜெட் தொகை குறைவு ஆகும். 2014ம் ஆண்டு அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டின் தொகை ரூபாய் 17 லட்சத்து 94 ஆயிரத்து 892 கோடி ஆகும். 2015ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டின் தொகை ரூபாய் 17 லட்சத்து 77 ஆயிரத்து 477 கோடி ஆகும்.