பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.


அதில், கடந்த 10 ஆண்டுகளில், உயர்கல்வித்துறைக்கு மோடி தலைமையிலான அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து பேசிய அவர், "ஸ்கில் இந்தியா மிஷன் மூலம் (திறன் இந்தியா திட்டம்) 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 54 லட்சம் இளைஞர்களின் திறன்  மேம்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் 3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளோம். 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் என ஏராளமான உயர்கல்விகள் நிறுவனங்களை அமைத்துள்ளோம். நமது தேசத்தின் செழுமை என்பது நமது இளைஞர்களை திறம்பட வலுவூட்டுவதையும் தயார்படுத்துவதையும் சார்ந்துள்ளது.


சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறது தேசிய கல்விக் கொள்கை 2020. உயர்தர கல்வியை வழங்குவதிலும் தனிநபர்களின் முழுமையான வளர்ச்சியை வளர்ப்பதிலும் பிஎம் ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (பிஎம் எஸ்ஹெச்ஆர்ஐ) திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித படிப்புகளில் பெண்கள் சேர்வது 43 சதவிகதமாக உயர்ந்துள்ளது. இந்த பாட பிரிவுகளில் அதிக அளவில் பெண்கள் சேரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போதுள்ள மருத்துவமனையின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலும் பல மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது.


பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது இளைஞர்களின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை ஆதரிப்பதற்காக 22.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ், ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்-அப் கிரெடிட் கியாரண்டி திட்டங்கள் போன்ற திட்டங்கள், நமது இளைஞர்களை சுயதொழில் செய்ய உதவிபுரிகின்றன.


2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதன் மூலம் நமது இளைஞர்கள் விளையாட்டில் சாதனைகள் புரிந்துள்ளனர். இதனால், நமது தேசம் பெருமிதம் கொள்கிறது.


இளம் வயதில் செஸ் போட்டியில் கலக்கி வரும் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு சவால் விடுவதில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினார்.  இன்று, இந்தியா 80க்கும் மேற்பட்ட செஸ் கிராண்ட்மாஸ்டர்களைக் கொண்டுள்ளது. 2010ஆம் ஆண்டு, 20 கிராண்ட்மாஸ்டர்கள் இருந்தனர். அதை ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.


பல இளைஞர்கள் மருத்துவர்களாக தகுதி பெற வேண்டும் என்று லட்சியமாக உள்ளனர். மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் மூலம் நமது மக்களுக்கு சேவை செய்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். பல்வேறு துறைகளின் கீழ் இருக்கும் மருத்துவமனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க எங்கள் அரசு திட்டமிட்டுள்ளது. இப்பிரச்னைகளை ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்க, இதற்கான குழு அமைக்கப்படும்" என்றார்.