Economic Survey 2025 LIVE: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.


பட்ஜெட் கூட்டத்தொடர்:


நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  மக்களவையில் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தனித்தனியாக தாக்கல் செய்ய உள்ளார். சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 



இரண்டு கட்டங்களாக கூட்டத்தொடர்:


முதல்கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி வணிகம் தவிர, 16 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.  தொடர்ந்து இரண்டாவது கட்டமாக , பட்ஜெட் முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக மார்ச் 10ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். 


பிரதமர் மோடி நம்பிக்கை


கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மா லட்சுமி தொடர்ந்து அருள் புரிய பிரார்த்திக்கிறேன். ஜனநாயக நாடாக இந்தியா 75 ஆண்டுகளை நிறைவு செய்தது பெருமைக்குரிய விஷயம். இந்தியா உலக பீடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இந்தியா தனது விக்சித் பாரத் நோக்கத்தை நிறைவேற்றும் என்றும், இந்த பட்ஜெட் புதியதாக இருக்கும் என்றும் நான் நம்பிக்கையுடன் கூறுவேன்” என தெரிவித்தார். இதன் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதை போன்று, தனிநபர் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதன் மூலம் மக்களிடையே செலவினம் அதிகரிக்கும். அது தேவையை உயர்த்தி, உற்பத்தியை ஊக்குவித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.