Budget 2025 Income Tax: ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு, வரியே கிடையாது என மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்வு


கடந்த பட்ஜெட்டின்படி, ரூ.7 லட்சமாக இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு தற்போது 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  2014ம் ஆண்டிற்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து,  2019ம் ஆண்டு தனிநபர் வருமான வரி விலக்கு  5 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், கடந்த 2023ம் ஆண்டு தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன் உச்சமாக தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு நிலையாக வழங்கப்படும் ரூ.75 ஆயிரம் விலக்கையும் சேர்த்து, மாத ஊதியதாரர்கள் ரூ.12.75 லட்சம் வரையிலான வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வெளிநாட்டு வருவாய்க்கும், வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி விலக்கு அறிவிப்பானது, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.






யார் யாருக்கு விலக்கு?


சாதாரண மாதாந்திர ஊதியம் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபபவர்களுக்கு, புதிய வரி விதிப்பின் முறையின்படி விலக்கு அளிக்கப்படும். அதேநேரம், நீங்கள் முதலீடு அல்லது சிறப்பு வருவாய் மூலம் நிதியை ஈட்டினால், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்.


வருமான வரி அடுக்கு


0 முதல் ரூ. 4 லட்சம்  வரையிலான வருவாய்க்கு வரி ஏதும் விதிக்கப்படாது. மேலும்,  ரூ.4  லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5 சதவிகிதமும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12  லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 10 சதவிகிதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.16  லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கும் 15 சதவிகிதமும்,  ரூ. 16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 20 சதவிகிதமும், ரூ. 20 லட்சம் முதல் ரூ.24  லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 25 சதவிகிதமும், ரூ.24  லட்சத்திற்கும் அதிகமான வருவாய்க்கு 30 சதவிகித வரியும் வசூலிக்கப்படும்.


வருமான வரி விலக்கு வரம்புகள் எந்த ஆண்டு எவ்வளவு அதிகரிப்பு



2005: ரூ.1 லட்சம்
2012: ரூ.2 லட்சம்
2014: ரூ.2.5 லட்சம்
2019: ரூ.5 லட்சம்
2023: ரூ.7 லட்சம்
2025: ரூ.12 லட்சம்