பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் தொடர்ந்து நான்காவது முறையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இறுதியாக, பொதுமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பை, நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
புதிய வருமான வரிதிட்டம்:
அப்போது, நாட்டில் புதிய வருமான வரி திட்டம் உருவாக்கப்படுகிறது. புதிய வருமான வரி திட்டம் அறிமுகப்படுத்தப்பாட்டாலும், பழைய வருமான வரி திட்டத்தின் மூலமான சலுகைகளையும் தனிநபர்கள் பெற முடியும். அதேநேரம், நிறுவனங்கள் சார்ந்த கணக்குகளுக்கு புதிய வருமான வரிதிட்டம் என்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரி திட்டத்தில் 6 பிரிவுகளாக இருந்த வரிவிதிப்பு முறை, புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தில் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம்:
புதிய வருமான வரி திட்டம் மூலம், தனிநபர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்தை வருவாயாக கொண்டிருந்தால், அவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.2.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அது 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரிவிதிப்பு முறை:
அதைதொடர்ந்து, ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருவாயாக கொண்டு இருப்பவர்கள் 5 சதவிகிதம் வரியும், ரு. 6 முதல் 9 லட்சம் வரையிலான வருவாய் கொண்டிருப்பவர்கள் 10 சதவிகிதம் வரியும் செலுத்த வேண்டும். ரூ.9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாயை கொண்டவர்கள் 15 சதவிகித வரியும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாயை கொண்டவர்கள் 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும். ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்டவர்கள், 30% வரியை செலுத்த வேண்டும். முன்னதாக, ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் கொண்டவர்களுக்கு, சர்சார்ஜுடன் சேர்த்து 39 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 30 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.7 லட்சம் வரையில் வரி விலக்கு
பொதுவாக 37 சதவிகிதம் அளவிற்கு இருந்த சர்சார்ஜ் விகிதம், தற்போது 25 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தின் மூலம், ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள், உரிய ஆவணங்களை செலுத்துவதன் மூலம் முழு வரி விலக்கு பெற்றனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில், ரூ.7 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்களும், முழு வரி விலக்கு பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.