முன்னணி தனியார் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதீரியம், என்எஃப்டி போன்றவை எப்போதுமே இந்தியாவில் சட்ட அங்கீகாரம் பெற முடியாது என நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் கூறியுள்ளார்.
அதேபோல் கிரிப்டோ சொத்துகள் அதாவது மெய்நிகர் சொத்துக்கள் எதுவுமே அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெறாது. ஏனெனில் இவற்றின் மதிப்பு தனியாரால் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்ஸியைக் கொண்டு வரும் என்று அறிவித்தார். மேலும் கிரிப்டோகரன்சிகளுக்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஆனால் அடுத்த நாளான இன்றே முன்னணி தனியார் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதீரியம், என்எஃப்டி போன்றவை எப்போதுமே சட்ட அங்கீகாரம் பெற முடியாது என நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் கூறியுளார். கிரிப்டோ சொத்துகளின் மதிப்பு இரண்டு தனிநபர்களுக்கு இடையே முடிவாகிறது. அதைப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் தங்கம், வைரம், கிரிப்டோ கரன்சி என வாங்கலாம். ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்காது. அதே போல் கிரிப்டோ முதலீடு வெற்றிகரமானது தானா என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதில் எந்த தனிநபருக்கு நட்டம் ஏற்பட்டாலும் அதற்கு அரசாங்கம் பொறுப்பாக முடியாது என்று வலியுறுத்திக் கூறினார்.
இதனால் பிட்காயின், எதீரியம், என்எஃப்டி முதலீடுகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை உருவாகியுள்ளது.
அதேவேளையில், ரிசர்வ் வங்கி கொண்டுவரவுள்ள டிஜிட்டல் நாணயத்தின் மீதான முதலீடு பாதுகாப்பானது என்று அவர் கூறியுள்ளார். டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால் அவற்றில் தவறே ஏற்படாது. இது ஆர்பிஐயின் பணம். ஆனால் அதன் தன்மை டிஜிட்டல் வடிவம். அதனால் இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவரவுள்ள டிஜிட்டல் நாணயத்திற்கு மட்டும் தான் சட்ட அங்கீகாரம் உண்டு. இதைத்தான் நிதியமைச்சர் குறிப்பிட்டார் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
டிவி சோமநாதனின் பேச்சு தனியார் கிரிப்டோ முதலீடுகளை தவிர்க்குமாறும் ரிசர்வ் வங்கி மூலம் வரும் டிஜிட்டல் நாணய முதலீட்டை நம்புமாறும் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக பிட்காயின் மதிப்பு கடந்த ஆண்டில் வரலாற்று உச்சம் கண்ட நிலையில் இந்த ஆண்டு பிறந்ததில் இருந்தே பாதாளத்துக்கு சென்று வருகிறது.