வாழ்க்கையில் திட்டமிடல் என்பது மிகவும் அவசியம். அதுவும் நிதி சார்ந்த திட்டமிடல் என்பது கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவை. இப்படியான பட்சத்தில் தற்காலத்தில் கல்வி கட்டணம் செலுத்துவதற்காகவே நாம் அதிகமாக சம்பாதிக்கவும், சேமித்து வைக்க வேண்டிய தேவையும் உள்ளது.
குழந்தைகளின் கல்விக்கான செலவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதில் எந்த மறுப்பும் இல்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலேயேயும் பெற்றோர்கள் பணம் சேர்க்க திட்டமிடுகின்றனர். இதற்காக வங்கி, தபால் நிலையம், மியூச்சல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பள்ளி கல்வி மட்டுமல்லாமல் உயர்கல்வி பெறவும் அதிகம் செலவாவதால் சேமிப்பு மட்டும் நமக்கு கைகொடுக்காது. சரியான முதலீடு நமக்கு உரிய நேரத்தில் கைகொடுக்கும். அப்படியான 3 திட்டங்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
Public Provident Fund (PPF)
அஞ்சல் துறையில் இருக்கும் இந்த Public Provident Fund திட்டம் சேமிப்பு ஒரு சிறந்த வழிமுறையாகும். முதலீடோ, சேமிப்போ எதுவாக இருந்தாலும் நீண்ட காலம் என்பது கைகொடுக்கும். அப்படியான இந்த Public Provident Fund திட்டம் 15 ஆண்டுகள் கொண்டதாகும். இதில் மாதம் நீங்கள் குறைந்தது ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். நீங்கள் ஆண்டுக்கு ரூ.12000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் 15 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு கிடைக்கும் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.3, 25,457 ஆகும். மாதம் 2 ஆயிரம் சேமிக்கிறீர்கள் என்றால் உங்கள் கையில் ரூ.6,50,913 கிடைக்கும்.
குழந்தைகளின் கல்வி போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு இது ஒரு நல்ல வழியாகும். PPF 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.முதிர்ச்சியடைந்த பிறகும், கணக்கை 5 ஆண்டுகளிக்கு நீட்டிக்க முடியும். அதற்கான வரிச்சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்மார்ட் வளர்ச்சி திட்டம்
இதேபோல் கல்விக்கான சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் ஸ்மார்ட் வளர்ச்சி திட்டம் ஆகும். இது உங்கள் வருமானத்தை பொறுத்தது. SIP 10 முதல் 15 ஆண்டுகளை அடிப்படையாக கொண்டது. சிறிய முதலீட்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தொகையை அதிகரிக்கும் வசதி உள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால், சுகன்யா சம்ரிதி யோஜனா மிகவும் இலாபகரமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் 8.2 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் ஆகும். 21 ஆண்டுகளில் இந்த கணக்கு முதிர்ச்சியடையும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை பணம் செலுத்தலாம். இதன்மூலம் 21 வயதில் நல்ல முதிர்வு தொகை கிடைக்கும்.