கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வங்கிகளின் செயல்பாட்டு நேரம் மாற்றம். வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) வரை, வங்கிகள் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே  செயல்படும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் - தமிழ்நாடு தெரிவித்தது. 

 

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாநிலத்தில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். அதேவேளை, மக்களுடன் நேரடி தொடர்பில் இல்லாத ஊழியர்கள் அனைவரும் வழக்கமான முறைப்படி பணியாற்றுவார்கள். ஆதார் – வங்கி கணக்கு இணைக்கும் மையம் ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்பாடு மண்டலங்களுக்குள்ளே செயல்படும் வங்கிகள் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றவேண்டும்; வங்கிகளின் வணிகத்தொடர்பாளர் (Business Correspondents) வழக்கம்போல் பணிபுரிய வேண்டும்; வங்கி ஏடிஎம்/ சிடிஎம் உள்ளிட்டவைகள் வழக்கம்போல் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.                 


 

   

தமிழகத்தில் கோவிட்-19 பரவலை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.  இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, திரையரங்குகள், வணிகவளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், இறுதி ஊர்வலத்தில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை.ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு கூறியது.