Bank Holidays April 2024: ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


வங்கிகள் விடுமுறை:


வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் விடுமுறை:


ஒவ்வொரு மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் பண்டிகைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, ஏப்ரல் 11ஆம் தேதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படாது.


விடுமுறை தின பட்டியல்:



  • ஏப்ரல் 1:  மிசோரம், சண்டிகர், சிக்கிம், மேற்கு வங்கம், ஹிமாச்சல், மேகாலயா மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

  • ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன்  ராம் பிறந்தநாள் (தெலங்கானா, ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்படும்)

  • ஏப்ரல் 9: உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு (மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா, மணிப்பூர், கோவாவில் வங்கிகள் மூடப்படும்)

  • ஏப்ரல் 10: ரம்லான் பண்டிகை (கேரளாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)

  • ஏப்ரல் 11: ரம்லான் பண்டிகை (சண்டிகர், சிக்கிம், கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களை தவிற மற்ற இடங்களில் வங்கிகள் மூடப்படும்)

  • ஏப்ரல் 13: இரண்டாவது சனிக்கிழமை

  • ஏப்ரல் 15: போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம் (அசாம், ஹிமாச்சல் பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

  • ஏப்ரல் 16: ஸ்ரீராம நவமி (குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்)

  • ஏப்ரல் 20: கரியா பூஜை (திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்) 


தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகள் தங்கள் வருடாந்திர கணக்கை மூடுவதற்கு, ஏப்ரல் 9ஆம் தேதி உகாதி பண்டிகை, ஏப்ரல் 11ஆம் தேதி ரமலான் பண்டிகை, ஏப்ரல் 13ஆம் தேதி  இரண்டாவது சனிக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


கடந்த மாதத்திலும் தமிழகத்தில் 3  நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.