பேடிஎம் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டுக்கு நவம்பர் 8 முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 8-ம் தேதி முதல் நாளில் 16 சதவீதம் அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். இதன் மூலம் ரூ.18,300 கோடி அளவுக்கு நிதி திரட்டுகிறது பேடிஎம்.
* ஒரு பங்கின் விலையாக ரூ.2080 முதல் ரு 2,150 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 18300 கோடி ரூபாயில் 8300 கோடி ரூபாய் புதிய பங்குகள் மூலமும், ரூ.10000 கோடி ரூபாய் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதன் மூலமும் கிடைக்கும்.
* இந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. இந்த ஐபிஓ மூலம் ரூ.402 கோடி மதிப்பிலான பங்குகளை இவர் விற்கிறார். இதுதவிர முக்கியமான முதலீட்டாளர்களான சாப்ட்பேங்க், அலிபாபா குழுமம் மற்றும் எலிவேஷன் கேபிடல் ஆகியவையும் பங்குகளை விறக் திட்டமிட்டுள்ளன.
* சிறு முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் ஆறு பங்குகள் கொண்ட லாட்க்கு விண்ணப்பிக்கலாம். சிறு முதலீட்டாளர்கள் பிரிவுக்கு அதிகபட்சம் 15 லாட் வரை விண்ணப்பிக்கலாம். (ரூ 2 லட்சத்துக்குள் முதலீடு செய்தால்தான் சிறு முதலீட்டாளர்கள்)
* இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் தளம் இது. இந்த பிரிவில் பெரும் சந்தையை வைத்திருக்கிறது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக லாபம் ஈட்டவில்லை. கடந்த நிதி ஆண்டில் ரூ.1701 கோடியாக நஷ்டம் இருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் கூட ரூ.381 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
* ஐபிஓவுக்கு பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.40 லட்சம் கோடியாக (20 பில்லியன் டாலர்) இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஐபிஓவுக்கு பிறகு பட்டியலிடப்பட்ட முதல் 50 நிறுவனங்களுக்குள் பேடிஎம் இருக்கும்.
* 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகுதான் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. அதேபோல நவம்பர் 8-ம் தேதி ஐபிஒ தொடங்கி இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வே
* 2017-ம் ஆண்டு 140 கோடி டாலர் அளவுக்கு சாப்ட்பேங் முதலீடு செய்தது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு மூன்று மடங்குக்கு மேல்.
* இந்த நிறுவனம் ஆர்பிஐ, செபி மற்றும் ஐஆர்டிஏ உள்ளிட்ட மூன்று நிதி சார்ந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுபாட்டில் செயல்படுகிறது. அதனால் இந்த நிறுவனத்தின் ரிஸ்க் கொஞ்சம் அதிகம் என்பதை சில புரோக்கிங் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.
* மேலும் நிறுவனத்தின் விற்பனையை விட 50 மடங்குக்கு மேல் சந்தை மதிப்பு இருப்பதால், சர்வதேச நிறுவனங்களை விட இது அதிகம் என்பதையும் சில சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
* சந்தை மதிப்பு அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்ளும் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல வளர்ச்சி இந்த நிறுவனத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
* தற்போதைய சூழலில் நஷ்டமீட்டும் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைப்பது கடினம் என்றும் அதனால் இந்த ஐபிஓவை தவிர்க்கவும் சில புரோக்கிங் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. சில நிறுவனங்கள் மிக நீண்ட காலத்துக்கு திட்டமிடுபவர்கள் மட்டும் முதலீடு செய்யலாம் என்றும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
* ஆனால் பேராசிரியர் அஸ்வத் தாமோதரன் பேடிஎம் சந்தை மதிப்பு ஏற்புடையதுதான் என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஒருவருடைய போர்ட்போலியோவில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். 25 சதவீதத்துக்கு மேல் ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் இருக்க வேண்டாம் என குறிப்பிட்டிருக்கிறார்.
* இந்த பங்கில் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் நவம்பர் 17-ம் தேதி உங்களுடைய டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். நவம்பர் 18-ம் தேதி இந்த பங்கின் வர்த்தகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.