உலகிலேயே 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய மதிப்பில் அந்நிறுவனத்தின் தற்போதையை மதிப்பு என்பது ரூ.2 கோடியே 46 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
வரலாற்றில் முதன்முறையாக..!
நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் வெள்ளிக்கிழமையின் முடிவில், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டாலர் என்ற மதிப்பை எட்டியது. இதனால், அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதன் மூலம் வரலாற்றிலேயே சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம், 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் மதிப்பை எட்டுவது இதுவே முதன்முறையாகும்.
ஒருவழியாக வந்த சாதனை:
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அடுத்தடுத்த இரண்டு நாட்கள், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. ஆனால், நாளின் முடிவு வரை அதனை தக்க வைக்க முடியவில்லை. அதைதொடர்ந்து, கடந்த வியாழக்கிமை வரை ஒருமுறை கூட ஆப்பிள் நிறுவனம் 3 டிரில்லியன் என்ற மதிப்பை எட்டவில்லை. இந்நிலையில் தான், வெள்ளிக்கிழமை அன்று நாள் முடிவு வரையில் ஆப்பிள் நிறுவனம் 3 டிரில்லியன் என்ற சந்தை மதிப்பை எட்டியது.
மீண்டு வந்த ஆப்பிள் நிறுவனம்:
47 வயதான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்புகள் கடந்த ஆண்டில் கடும் வீழ்ச்சி கண்டது. வளர்ச்சியின் மந்தநிலை மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையையும் பாதித்த வட்டி விகிதங்களின் அதிகரிப்பு போன்ற காரணங்களால், நடப்பாண்டு தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கீழாக சரிந்தது.
அதிலிருந்து மீண்டு வந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முன்னதாக, 2018-ம் வருடம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்ததும், அதன்பின் 2020-ல் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை தொட்டதும், ஆப்பிள் ஏற்கெனவே எட்டிய மைல் கற்கள் ஆகும்.
காரணம் என்ன?
சர்வதேச அளவில் மந்தமடைந்திருந்த தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பரந்த எழுச்சியினால் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ள "ஆப்பிள் விஷன் ப்ரோ" என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பலன் அடைந்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த இடங்களில் யார்?
ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து 6 நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பை பெற்றுள்ளன. அவற்றில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனபது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் 2.5 டிரில்லியன், சவுதி அராம்கோ 2 டிரில்லியன், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 1.5 டிரில்லியன், அமேசான் 1.3 டிரில்லியன் மற்றும் என்விடியா 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ளன.