ஆப்பிள் நிறுவனத்தின் 2022ம் ஆண்டு நிதியாண்டின் மொத்த வருவாய் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கடந்த நிதியாண்டின் ஒவ்வொரு நாளும் அந்த நிறுவனம் சராசரியாக, 2 ஆயிரத்து 147 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது.


ஆப்பிள் வருவாய் விவரம்:


கிளவுட் பீக் சட்டக் குழுவின் ஒரு ஆராய்ச்சி பிரிவானது, ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சமீபத்திய நிதியாண்டில் சம்பாதித்த லாபத்தை ஆய்வு செய்து, ஒவ்வொரு தொழிற்துறையிலும் அதிக லாபம் ஈட்டும் அமெரிக்க நிறுவனத்தைத் கண்டறியும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டது. 


அதன் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:


முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், 2022ம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் 94.68 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்த வருவாயானது 2022 நிதியாண்டு, செப். 26, 2021 அன்று தொடங்கி, செப். 24, 2022 அன்று முடிவடைந்தது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய அமெரிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.


மொத்த லாபத்தில் அபாரம்:


மேலே குறிப்பிடப்பட்ட அதே காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 61.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்ச கோடி ரூபாயும், அமேசான் நிறுவனம் 33.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2.76 லட்சம் கோடி ரூபாயையும் வருவாயாக ஈட்டியுள்ளது. இதன் மூலம், இந்த இரண்டு நிறுவனங்களின் வருவாயை சேர்த்தால் வரும் லாபத்தை காட்டிலும், அதிகப்படியான லாபத்தை ஆப்பிள் நிறுவனம் ஈட்டியுள்ளது. அதாவது சராசரியாக நாள் ஒன்றிற்கு 259.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 147 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.


காரணம் என்ன?


கடந்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 14 சீரிஸ் மற்றும் M2 சிப் உடன் புதிய மேக்புக் ஏர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இது அந்நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். இந்த நேரத்தில் ஆப்பிளின் லாபம் 2021 நிதியாண்டில் ஈட்டிய லாபத்தை விட 64.9% அதிகமாகும். ஆப்பிள் மிகவும் இலாபகரமான தொழில்நுட்ப நிறுவனமாகும். அதற்கு அடுத்தபடியாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மட்டுமே கடந்த நிதியாண்டில் 76.03 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் 6.29 லட்சம் கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.


முதல் இடத்தில் எந்த நிறுவனம்?


7.83 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டினாலும், அதிக லாபம் ஈட்டிய உலகளாவிய நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான சவுதி அரம்கோ தான், உலகளவில் 2022 நிதியாண்டில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக உள்ளது. அதன்படி, 105.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 8.72 லட்சம் கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.