Elon Musk: பூமியில் இதுவரை எந்தவொரு நபரும் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சொத்து மதிப்பை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

$500 சொத்து மதிப்பை கடந்த எலான் மஸ்க்

ஹாலிவுட் நடிகர்களையே பின்னுக்கு தள்ளி ரூ.12,490 கோடி சொத்துகளுடன், உலகின் பணக்கார நடிகர் என்ற சிறப்பை இந்தியாவைச் சேர்ந்த ஷாருக்கான் பெற்றுள்ளார். பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டை (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) பின்னுக்கு தள்ளி அவர் முதலிடத்தை பிடித்த செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் தான், பூமியிலேயே முதல் முறையாக 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சொத்து மதிப்பை எட்டிய நபர் என்ற பெருமையை டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பெற்றுள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட பணக்காரர்களின் பட்டியலில், “அமெரிக்க நேரப்படி அக்டோபர் 1ம் தேதி மாலை 4.15 மணியளவில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு $500.1 பில்லியனை எட்டியது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.4.43 கோடி கோடிகள் ஆகும். டெஸ்லா உள்ளிட்ட எலான் மஸ்கின் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இந்த நிலையை அவர் எட்டியுள்ளார். உலகின் இரண்டாவது பணக்காரராக ஒராகல் நிறுவனத்தின் நிறுவனரான லேரி எலிசன், $350.7 மதிப்பிலான சொத்துகளை கொண்டுள்ளார்.

Continues below advertisement

$500 பில்லியன் மதிப்பை கடந்தது எப்படி?

எலான் மஸ்கின் அதிகப்படியான சொத்து என்பது டெஸ்லாவுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் 12% க்கும் அதிகமான பங்குகளை அவர் தன் வசம் வைத்திருக்கிறார். நடப்பாண்டின் தொடக்கத்தில் நிறுவனம் சற்றே சரிவை சந்தித்தாலும், மஸ்க் தனது கவனத்தை அரசியலில் இருந்து விலக்கி மீண்டும் தனது நிறுவனங்களின் மீது செலுத்தியதால் டெஸ்லா பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லாவின் பங்குகள் 14% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. புதன்கிழமை (அக்டோபர் 1) டெஸ்லா பங்குகள் 3.3% உயர்ந்து, அவரது சொத்து மதிப்பில் மேலும் $6 பில்லியன்களுக்கும் அதிகமாக சேர்த்தன.

மஸ்க்கின் பிற முயற்சிகளான AI ஸ்டார்ட்அப் xAI மற்றும் ராக்கெட் நிறுவனமான SpaceX ஆகியவற்றின் மதிப்பீடுகளும் அதிகரித்துள்ளன. XAI கடைசியாக ஜூலை மாதம் $75 பில்லியனாக மதிப்பிடப்பட்டது, மேலும் $200 பில்லியனை இலக்காகக் கொண்டதாக வதந்தி பரவியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சமீபத்திய நிதி விவாதங்களுக்குப் பிறகு SpaceX நிறுவனத்தின் மதிப்பு சுமார் $400 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1 பில்லியனுக்கு டெஸ்லா பங்குகளை வாங்கிய மஸ்க்

கடந்த மாதம், எலான் மஸ்க் கிட்டத்தட்ட $1 பில்லியன் மதிப்பிலான டெஸ்லா நிறுவன பங்குகளை வாங்கினார். பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) தாக்கல் செய்த தகவலின்படி,  செப்டம்பர் 12ம் தேதி அறக்கட்டளை மூலம் மறைமுகமாக பங்குகளை வாங்கினார். இது பிப்ரவரி 2020 க்குப் பிறகு மஸ்க் பங்குகளை திறந்த சந்தையில் வாங்கிய முதல் நிகழ்வாகும். சுமார் 2.57 மில்லியன் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.  இதனிடையே, அவர் டெஸ்லா நிறுவனத்துடன் தொடர்ந்து பயணிக்க, சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.