ஏர் இந்தியா இணைப்பு: டாடா குழுமம் முன் உள்ள சிக்கல் என்ன?
68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏர் இந்தியாவை டாடா கைப்பற்றுகிறது என்னும் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த உற்சாகத்தை குறைக்க வேண்டாம் என்பதற்காக சில காலம் காத்திருந்தோம். டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா எந்தமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்ப்போம்.
சிக்கலான துறை
ஒவ்வொரு துறையிலும் பல சிக்கல் இருக்கும். ஆனால் விமான போக்குவரத்து துறையே சிக்கல் நிறைந்த துறை. இந்த தொழிலில் ஸ்கேலிங் என்பதே கிடையாது. அதாவது இருக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. சமயங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாமே தவிர உச்சபட்ச வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்பது முன்பே தெரிந்துவிடும். ஆனால் செலவுகள் எல்லாம் நிலையான செலவுகள், பைலட், எரிபொருள், பணியாளர்கள், விமான ஸ்லாட் கட்டணம் என அனைத்துமே நிலையான செலவுகள். ஆனால் வருமானம் மாறிக்கொண்டு இருக்கும். கடந்த ஆண்டு மட்டும் 137 பில்லியன் டாலர் அளவுக்கு சர்வதேச விமான போக்குவரத்து துறை நஷ்டம் அடைந்திருக்கிறது. இந்த ஆண்டும் இதுவரை 51 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம். டாடா குழுமத்தில் உள்ள இரு நிறுவனங்களுமே ஏர் ஏசியா மற்றும் விஸ்தாராவும் நஷ்டத்தில்தான் உள்ளன. இது போன்ற சூழல் காரணமாகவே விமான போக்குவரத்து துறையில் திவால் ஆகும் நிகழ்வு அடிக்கடி நடக்கின்றன.
பணியாளர்கள்
ஏர் இந்தியா நிறுவனத்துடன் 12000 பணியாளர்களும் உள்ளனர். அடுத்த ஓர் ஆண்டுகளுக்கு இவ்வளவு பெரிய மனிதவளத்தை கையாள வேண்டும். அதிக சம்பளம் வாங்கும் பலர் இருப்பார்கள். இதுவரை தலைமைச் செயல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். டாடாவுக்கு கிடைத்தது, ஏர் இந்தியாவின் ஸ்லாட், பணியாளர்கள், விமானம் மற்றும் கடன் மட்டுமே. அலுவலகம் கிடையாது. ஏர் இந்தியாவின் அலுவலகங்கள் அனைத்தும் மத்திய அரசு வசம் மட்டுமே இருக்கும். இந்த ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுதான் ஏர் இந்தியாவின் கடனை அடைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
அதனால் இவ்வளவு பெரிய பணியாளர்களுக்கான இடத்தை கண்டறிவது அதுவும் ஒவ்வொரு நகரங்களிலும் கண்டறிய வேண்டும். டாடா குழுமத்துக்கு உடனடியாக உள்ள சவால் இதுவாகும்.
இணைப்பு
மூன்று விமான நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க டாடா திட்டமிடுவதாக தெரிகிறது. வெளிப்படையாக பார்த்தால் மூன்று நிறுவனமாக இருக்கும். ஆனால் நான்கு நிறுவனங்கள் உள்ளன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என இரு நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்பது பட்ஜெட் விமான நிறுவனமாகும். அதனால் குழுமத்தில் உள்ள மற்றொரு பட்ஜெட் விமான நிறுவனமாக ஏர் ஏசியாவுடன் இணைக்கலாம் என தெரிகிறது. ஆனால் இரு நிறுவனங்களுமே வேவ்வேறு பிராண்ட் விமானங்களுடன் செயல்படுகிறது. ஏர் ஏசியா நிறுவனம் ஏர்பஸ் என்னும் விமானத்தை பயன்படுத்துகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானத்தை பயன்படுத்துகிறது. அதனால் இந்த இணைப்பு எப்படி இருக்கும் என்பதும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை இந்தியாவில் இணைக்கப்பட்ட விமான நிறுவனங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ். கிங்பிஷர் மற்றும் ஏர் டெக்கான் மூன்றாவதாக ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் சஹாரா ஆகியவை இணைக்கப்பட்டன. ஆனால் இவை மூன்றுமே தோல்விடைந்த பட்டியலில் உள்ளன.
பணியாளர்களை ஈர்க்கவேண்டும்
தற்போது இந்தியாவில் இரண்டாவது பெரிய விமான நிறுவனம் ஏர் இந்தியா. ஆனால் முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தவிர புதிதாக ஆகாசா என்னும் விமான நிறுவனம் அடுத்தாண்டு சந்தைக்கு வருகிறது. ( இது குறித்து மேலும் படிக்க..)
இந்த சூழலில் பணியாளர்களை டாடா குழுமம் கவர வேண்டும். ஏர் இந்தியா விமானங்கள் சிலவற்றை மாற்ற வேண்டும் என தெரிகிறது. தவிர ஏர் இந்தியாவின் இன்பிளைட் அனுபவம் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாக இல்லை என்பது வெளிப்படையான ஒன்று. தவிர சர்வதேச பயணங்களில் ஏர் இந்தியாவை விட மற்ற நிறுவனங்களையே பயணிகள் விரும்புகிறார்கள். லுப்தான்சா, பிரிட்டீஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், எமிரட்ஸ் என சர்வதேச வழித்தடத்தில் பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி புதிய சந்தையை ஏர் இந்தியா பிடித்தாக வேண்டும்.
டாடா இணைப்புகளின் வரலாறு
இதுவரை பல நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கி இருக்கிறது. ஆனால் ஒரு சில நிறுவனங்களை தவிர மற்ற அனைத்தும் பெரும் வெற்றியை பெறவில்லை. டெட்லி டீ, கோரஸ் ஸ்டீல் உள்ளிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கியது டாடா. ஆனால் அவற்றுக்கு பெரும் விலை இருக்கிறது. ஏற்கெனவே எழுதியிருப்பதைபோல ஏர் இந்தியா டாடா குழுமத்துக்கு வந்திருப்பது எமோஷனலான தருணம் என்பதில் மாற்றுஇல்லை. ஆனால் சரியான பிஸினஸ் முடிவா?