இணைய சேவையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் 5ஜி சேவைக்கான ஏலம் வரும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறுகிறது.
நேற்று ஜூலை.08ஆம் தேதியே இந்த ஏலத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். இந்த ஏலத்தைக் கைப்பற்ற இந்தியாவின் மூன்று பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையென்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக அதானி குழுமம் இதில் களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதானி குழுமம் அண்மையில் தேசிய நீண்ட தூரம் (NLD) மற்றும் சர்வதேச நீண்ட தூரம் (ILD) தொலைத்தொடர்பு சேவைகளின் உரிமங்களைப் பெற்றுள்ளது. ஆனால் இதனை அதானி குழுமம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அதானி குழுமம் 88.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டி அதன் சொத்து மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
ஏற்கெனவே பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களான அம்பானி மற்றும் அதானி குழுமங்களிடையே பெரும் போட்டா போட்டி நிலவி வரும் நிலையில், ஜூலை 26ஆம் தேதி அன்று அதானி குழுமம் 5G ஏலத்தில் பங்கேற்பதாகக் கூறப்படும் செய்தி பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
இந்த ஏல காலக்கெடுவின்படி, விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படும். அதேசமயம் ஏலதாரர்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்