Aadhar Linking: நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு:
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதேபோல, ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு இணைத்திருப்பதும் அவசியமானது.
அதாவது, பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் திட்டங்கள் அனைத்திலும், பயனாளிகளுக்கே உரிய தொகை செல்வதை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை:
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் பணிவாய்ப்பு வழங்க தவறினால் ஊதியத்தை அபராதமாக வழங்கும் வகையில் விதிகள் உள்ளன. இப்படி இருக்கும் நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் சம்பளம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகமானோர் இணைக்காமல் இருந்ததால் மாநில அரசுகள் காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்தது.
நாளை கடைசி நாள்:
அதன்படி, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்கான படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.