ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறம், நகர்ப்புறம் என பாகுபாடின்றி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாக் கண்காணிப்பு மையமான (Centre for Monitoring Indian Economy) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜூலை மாதத்தில் 6.95% ஆக இருந்த வேலைவாய்ப்பினை ஆகஸ்ட் மாதத்தில் 8.32% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் 8.3% ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 9.78% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களை ஒப்பிடும்போது இது சற்றே குறைவு. மே மாதத்தில் 14.73%, ஜூன் மாதத்தில் 10.07%  என்ற விகிதத்தில் வேலைவாய்ப்பின்மை இருந்தது.


கிராமப்புற வேலைவாய்ப்பின்மையைப் பொறுத்தவரையில், ஜூலை மாதத்தில் 6.34% சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில்  7.64% ஆக அதிகரித்துள்ளது. இது 1.3% அதிகமாகும். வேலைவாய்ப்பின்மை குறைந்தாலும் தொழிலாளர்கள் பங்களிப்பு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமான அளவு உயர்ந்தது. இந்தியா கடந்த சில நாட்களாகவே வேலைவாய்ப்பு ரீதியாக கடுமையான சூழலை சந்தித்து வந்தது. கொரோனா பெருந்தொற்று சூழல் அந்தச் சூழலை மேலும் கடினமாக்கியது. நாடு முழுவதும் ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இப்போதும் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் 1.5 கோடி பேர் விவசாயத் துறையில் வேலையிழந்தனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்பு கிராமப்புறப் பகுதியில் அதிகமாக உள்ளது. பொருளாதார சரிவில் இருந்து தேசம் மீளும் வரை, விவசாயத் தொழிலில் உள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர்.


நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்துக்கான தொழிலாளர் சக்தி 43 கோடியாக அதிகரித்துளது. இது கடந்த மார்ச் 2020ல் இருந்ததற்கு இணையானது. இதன்மூலம். நாட்டின் எத்தனை பெரிய தொகையிலான மக்கள் வேறு வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”தொழில்துறை இறுக்கம் என்பது இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும். நல்ல தரமான வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம். பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. முதல் காலாண்டு நிதியாண்டில் ஜிடிபி ஏற்றம் கண்டுள்ளது நல்லதொரு சமிக்ஞை. இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால், வரும் மாதங்களில் ஏற்றமிகு சூழல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாவது அலையை மட்டும் வராமல் நாம் தடுத்துவிட்டோம் என்றால் இந்திய சந்தைகள் இன்னும் வலுப்பெறும், அது பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்” என்று தொழில்துறை பொருளாதார வல்லுநரான கே.ஆர்.ஷ்யாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.