பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பட பாணியில் காரில் குட்கா கடத்த முயன்ற இரண்டு பேரை வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே போலீசார் பொறி வைத்துப் பிடித்தனர் . இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடி தடுப்பு கம்பி மற்றும் ஒரு காவல்துறை வாகனம் சேதமடைந்தது. புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்யத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் , பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ,கண்டனர் லாரி , கார் , ஆம்னி பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதை ஆகியுள்ளது .
இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்குப் புகையிலை பொருட்களை வாணியம்பாடி வழியாகக் கடத்தப் போவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிபி சக்கரவர்த்தி , வாணியம்பாடி உதவி கண்காணிப்பாளர் பழனி செல்வம் மற்றும் வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் வாணியம்பாடி பகுதிகளில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நெகுந்தி சுங்கச்சாவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை நெகுந்தி சுங்கச்சாவடிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது, சந்தேகிக்கும் வகையில் ஒரு சிவப்பு நிற ஸ்கார்பியோ கார் காவல்துறையைக் கண்டதும் வாகன தணிக்கைக்கு நிற்காமல் அதிவேகமாக சென்றது .
இது குறித்த தகவலை உடனடியாக நெகுந்தி சுங்கச்சாவடிக்கு அருகே இருந்த போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு அந்த ஸ்கார்பியோ காரை சேஸ் செய்யத் தொடங்கினர் . ஆங்கில திரைப்படம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பாணியில் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்த இந்த சேஸிங் , போலீசார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்த கார் சுங்கச்சாவடிக்கு கடந்து செல்லாமல் தடுத்தனர். எனினும் இந்த சம்பவத்தால் சுங்கச் சாவடி தடுப்பு கம்பி, போலீஸ் வாகனம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் உள்ளிட்டவை அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் போலீசார் அந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் காரின் பின்புறம் 18 மூட்டைகளில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை அந்த காரில் இருந்த இருவர் கடத்த முயற்சி செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர் .
போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் வாகனத்தில் இருந்தவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 30 ) என்பதும் மற்றொருவர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 33 ) என்பதும் இவர்கள் பெங்களூருவிலிருந்து வேலூருக்கு இந்த குட்கா பொருட்களைக் கடத்த முயற்சித்தாகவும், வேலூருக்குக் கொண்டு சென்ற பின்னர் தரகர்கள் மூலம் குடியாத்தம் மற்றும் வேலூர் - ஆந்திரா எல்லை கிராமங்களுக்கு விநியோகம் செய்ய இருந்ததையும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக சுங்கச்சாவடி தடுப்புக் கட்டை மட்டும் காவல்துறை வாகனத்தை மோதி சேதப்படுத்திய வாகனத்தால் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது .