Toyota Innova Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டாவின் இன்னோவா கார் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக மாறியது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நோவாமல் போக இன்னோவா
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் மாடல்களுக்கு பஞ்சமில்லை. ஆனாலும், ஒரு சில கார்கள் மட்டுமே வாகனம் என்பதை தாண்டி, உணர்வாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் மாறும். அந்த வகையில் நோவாமல் போகனுமா? இன்னோவா தான் சரியான சாய்ஸ் என்ற பஞ்ச் லைனை தனக்கு சொந்தமாக்கியுள்ளது டொயோட்டாவின் இன்னோவா கார். இந்தியாவின் பெரிய குடும்பங்களுக்கு மட்டுமின்றி, பெரிய கார் வாங்க விரும்பும் அரசியல்வாதிகளின் பிரதான தேர்வாகவும் இன்னோவா திகழ்கிறது. அப்படி கண்மூடித்தனமாக நம்பி வாங்கும் அளவிற்கு இந்த காரில் என்ன தான் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியர்கள் இன்னோவாவை விரும்புவது ஏன்?
இந்தியர்கள் இன்னோவா காரை நம்புவதற்கு அது வழங்கும் அதிகப்படியான நம்பகத்தன்மை, பிரமாண்ட இடவசதி, மறுவிற்பனையின்போது நல்ல மதிப்பை வழங்குவது ஆகியவை முக்கிய காரணிகளாகும். இதன் விளைவாக குடும்பத்திற்கு மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கும் உகந்த நடைமுறைத்தன்மைக்கான மற்றும் நீடித்த தேர்வாக உள்ளது. தரமான கட்டுமஸ்தான தயாரிப்பு, லட்சக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு ஓடும் திறன், வசதியான பயணம், விசாலமான லெக்ரூம் உடன் பலதரப்பட்ட கேபின் ஆகியவற்றால் பொதுமக்கள் இன்னோவாவை விரும்பி வாங்குகின்றனர். வாடகைக் கார் பிரிவிலும் ப்ரீமியம் மாடலாக இது ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்னோவா வழங்கும் நம்பகத்தன்மை:
நீடித்து உழைக்கும் இன்ஜின்: இன்னோவா அதன் புல்லட்ப்ரூஃப் இன்ஜினிற்காக பிரபலமானதாகும். முறையான பராமரிப்பு இருந்தால் எந்தவொரு சிக்கலும் இன்றி, பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை அநாயசமாக கடக்கும்.
மறுவிற்பனை மதிப்பீடு: நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக கொண்டுள்ள அங்கீகாரத்தால், பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் சந்தையில் இன்னோவாவிற்கு பெரும் மதிப்பு உள்ளது.
வணிக பயன்பாடு: நம்பகத்தன்மை காரணமாக வாடகை கார் ஓட்டுனர்களுக்கு இன்னோவா ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது. ஏனெனில் இது திடீரென ஏற்படும் கோளாறுகளையும் மற்றும் பழுதுபார்க்கும் செலவுகளையும் குறைக்கிறது.
இன்னோவா வழங்கும் வசதியான பயணம்:
சொகுசான இருக்கை: மூன்று வரிசை இருக்கையானது 8 பேர் வரை அமரும் வகையிலான விசாலமான அமைவிடத்தை கொண்டுள்ளது. இதனால் பெரிய குடும்பங்களுக்கான பிரதான தேர்வாக இன்னோவா திகழ்கிறது.
வசதிகள் நிறைந்த இருக்கை: இன்னோவாவின் பல மாடல்களில் கூடுதல் கம்ஃபர்டிற்காக நடுவரிசைக்கு கேப்டன் சீட்களை கொண்டுள்ளன. மூன்றாவது வரிசை இருக்கைகளை மடிப்பதன் மூலம், லக்கேஜிற்கான இடவசதியை அதிகரிக்க முடியும்.
வசதியான கேபின்: உயரமான சீட்டிங் பொசிஷன், போதுமான லெக் மற்றும் ஹெட் ரூம், பயணத்தை மேலும் இதமாக்குவதற்கு எற்ற இடவசதி ஆகியவையும் கேபினை மேம்படுத்தி காட்டுகின்றன.
இன்னோவா பராமரிப்பும், பாதுகாப்பும்..
குறைந்த பராமரிப்பு: ப்ரிமியம் கார் மாடலாக திகழ்ந்தாலும், பிற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த பராமரிப்பே போதுமானதாக உள்ளது. பரந்த சர்வீஸ் நெட்வர்க், மலிவு விலை, உடனடியாக கிடைக்கக் கூடிய உதிரி பாகங்கள் ஆகியவை உரிமையாளர்களுக்கான செலவை குறைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள்: முதல் தலைமுறை தொடங்கி தற்போதைய எடிஷன் வரை டொயோட்டா நிறுவனம் இன்னோவாவை நவீன பாதுகாப்பு அம்சங்கள் (பல ஏர்பேக்குகள், ABS, நிலைத்தன்மை கட்டுப்பாடு) மற்றும் உட்புற வசதிகளுடன் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், சுற்றுப்புற விளக்குகள், ஹைக்ராஸில் பனோரமிக் சன்ரூஃப்) தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இன்னோவா இன்ஜின் ஆப்ஷன்கள்:
இன்னோவா காரின் இன்ஜின் ஆப்ஷனானது உற்பத்தி ஆண்டு மற்றும் மாடல் ஆகியவற்றை சார்ந்து வேறுபடுகிறது. ஆனால் பொதுவாக இன்னோவா க்ரிஸ்டாவில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. சில வேரியண்ட்களில் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி ஆப்ஷனையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். BS6 மாடல்களில் 2.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் நிலையாக வழங்கப்படுகிறது. ஹைப்ரிட் வெர்ஷனான ஹைக்ராஸில் ஹைப்ர்டி சிஸ்டம் உடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பலதரப்பட்ட தேர்வும் வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாக உள்ளது. க்ரிஸ்டா சுமார் 13 கிலோ மீட்டர் வரையிலும், ஹைக்ராஸ் ஹைப்ரிட் எடிஷன் அதிகபட்சமாக 23.24 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் வழங்குகிறது.
டொயோட்டா இன்னோவா விலை
டொயோட்டா க்ரிஸ்டா கார் மாடலின் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.24.84 லட்சத்தில் தொடங்கி ரூ.34.14 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், ஹைக்ராஸ் கார் மாடலின் விலை ரூ.23.87 லட்சத்தில் தொடங்கி ரூ.40.41 லட்சம் வரை நீள்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI